தவெக ஐடி விங்க்கிற்கு இதுதான் வேலையா? முன்பு நான், நேற்று அஜிதா, இப்போது விஜய்யின் மனைவி! வியூக வகுப்பாளர் மீது பகீர் குற்றச்சாட்டு பெண் ஆதரவாளர் பரபரப்பு வீடியோ

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியது முதலே அக்கட்சிக்கு ஆதரவாக சோனியா என்பவர், சமூகவலைதளங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வந்துள்ளார். தவெக வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமிக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், ஜானுக்கும் சோனியாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. தற்போது, விஜய்யிடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்துக் கேட்ட பிறகு தவெகவினர் சங்கீதாவை சமூகவலைதளங்களில் மிகமோசமாக விமர்சித்து வருகிறார்கள். சங்கீதாவிற்கு ஆதரவாகப் பதிவிட்ட சோனியாவை சமூக வலைதளத்தில் தவெக ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக சோனியா வெளியிட்டுள்ள காணொலியில் பேசியுள்ளதாவது: சில மாதங்களாக தவெக ஐடி விங்கைச் சேர்ந்த குறிப்பிட்ட கும்பல் என்னைப் பற்றி அவதூறு பரப்புவது நடந்துகொண்டு இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு தவெக ஐடி விங் அணியை உருவாக்கியபோது அதில் இருந்த ஒரே பெண் நான்தான். தொடர்ந்து, நான் பேட்டிகள் கொடுக்க தொடங்கிய பிறகு, என்னைப் பேசவிடாமல் செய்ய வேண்டும், இங்கு இருக்க விடக்கூடாது எனச் செயல்பட்டார்கள். அதற்கு ஆதரவாக ஜான் ஆரோக்கியசாமியும் செயல்பட்டார்.

ஜான் செய்தது தவறு என்று, நான் அனைத்தில் இருந்தும் வெளியேறி விட்டேன். ஜானின் விருப்பு வெறுப்புக்குப் பங்களிப்பாளராக இருப்பவரை என்ன வேண்டுமானாலும் செய்வீர்கள். எப்போது வேண்டுமானாலும் வெளியே போகச் சொல்வீர்கள். வெளியே வந்த பிறகு என்னை அதிமுக ஐடி விங் என்று சொன்னார்கள். கட்சிக்கு உள்ளே இல்லாமல், சின்ன வயது முதல் விஜய்யின் ரசிகராக இருந்து ஆதரவாளராக இருக்க வேண்டும் என அதற்குப் பிறகு நான் முடிவெடுத்தேன். சிலவற்றை தப்பு எனச் சொல்லி நான் கேள்வி எழுப்புவதை இவர்கள் விரும்புவது கிடையாது.

அப்படிக் கேள்வி கேட்டால் துரோகி எனச் சொல்கிறார்கள், பின்னால் திமுக, அதிமுக உள்ளது என முத்திரை குத்துகிறார்கள். இதுபோன்று என்னைப் போலவே இன்னும் சிலருக்கு நடந்துள்ளது. ஜான் ஆரோக்கியசாமி என்னுடன் மணிக்கணக்கில் பேசியுள்ளார், நிறைய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ஆனால் அந்த தகவல்கள் எல்லாம் வெளியே சென்றுள்ளது. அதை கொண்டு விஜய்யை விமர்சிக்கிறார்கள். யாரிடமிருந்து இதெல்லாம் வெளியே செல்கிறது என ஒரு நலம் விரும்பியாகக் கேள்வி கேட்டேன். ஆனால், பேசவே கூடாது, கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்வது ஜனநாயகம் கிடையாது; அதுவொரு பாசிச மனநிலை. தவெகவுக்கு வெளியில் இருந்து நான் எனது கருத்துகளை வைக்கிறேன். பிடித்தால் பின்தொடருங்கள், இல்லை என்றால் விட்டுவிடுங்கள். ஆனால், எதற்காக கும்பல் கூடி என்னைப் பிராண்டுகிறீர்கள்.

சங்கீதாவின் தனிப்பட்ட விஷயத்தை ஏன் தவெக ஆதரவு ஊடகங்களில் பேச வேண்டும். எல்லோருக்கும் திமுக, அதிமுக கைக்கூலிப் பட்டம் கொடுப்பதை வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. கும்பல் கூடி சமூக வலைதளத்தில் என்னைத் தாக்குவது கேவலமாக இல்லையா? ஐடி விங்கிற்கு இதுதான் வேலையா? கொடுத்த பொறுப்பிற்கு என்ன வேலை பார்த்து உள்ளீர்கள். முன்பு நான், நேற்று அஜிதா, இப்போது சங்கீதா என தாக்குவது தப்பாகப்படுகிறது. சங்கீதா தனது தனிப்பட்ட விவகாரம் குறித்துப் பேசக்கூடாது எனத் தெளிவாகக் கூறியுள்ளார். நமது தலைவருடன் இவ்வளவு வருடம் வாழ்ந்தவர் சொல்வதற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது நமக்கு தெரிய வேண்டும். நாம் எதற்கு அதைப் பேசவேண்டும் என்பதுதான் கேள்வி. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Related Stories: