சென்னை: அதிமுக – பாஜ கூட்டணி தொகுதி பங்கீட்டில் தொடர் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென டெல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது கண்டிப்பாக 55 சீட் ஒதுக்க வேண்டும். பாமகவுக்கு தனியாக சீட் ஒதுக்கிவிடுங்கள் என்று அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். இதனால் 156 தொகுதியில் அதிமுக போட்டியிடக்கூடிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளதால் மூத்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக பலமான கூட்டணியை கட்டமைத்துள்ளது. 19 கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு, கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஆனால், அதிமுக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படவே இல்லை. அதற்கான குழுவையும் அதிமுக தலைமை இன்னும் அமைக்கவில்லை. இதனால் கூட்டணி கட்சி தலைவர்கள், எடப்பாடி மீது அதிருப்தியில் உள்ளனர். அதிமுக கூட்டணியில் பாஜ, அமமுக, அன்புமணி தலைமையிலான பாமக, தமாகா, தமமுக, ஐஜேகே, புரட்சி பாரதம், புதிய நீதிக்கட்சி என கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையிலும் கூட, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.
அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி அமைந்துள்ளதாக சொல்லப்பட்டாலும், கூட்டணிக்குள் அன்புமணியின் பாமக, அமமுக மற்றும் சிறிய கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வந்தது பாஜதான். எனவே கூட்டணி கட்சிகள் எல்லாம் பாஜவிடம்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளுக்கும் நாங்களே தொகுதிகளை பங்கிட்டு கொடுக்கிறோம். நீங்கள் மொத்தமாக தொகுதிகளை எங்களுக்கு கொடுங்கள் என பாஜ கேட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும், அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு சம்மதிக்கவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதுரையில் என்டிஏ கூட்டணியின் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். என்டிஏ கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொள்ள மதுரை வந்த ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் கூட்டணி தேர்தல் வியூகங்கள் குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசனை நடத்தினார். எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி, நயினார் நாகேந்திரன், அன்புமணி, டிடிவி.தினகரன், ஜி.கே.வாசன், ஏசி.சண்முகம், பாரிவேந்தர், ஜெகன்மூர்த்தி, ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, பொதுக்கூட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.
பிரதமர் சென்ற பின் விமான நிலையத்தில் மீண்டும் அனைவரும் ஆலோசனை நடத்தினர். இதை தொடர்ந்து சிந்தாமணி பகுதி சுற்றுச்சாலை நட்சத்திர ஓட்டலில் மீண்டும் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இரவு வரை பேச்சுவார்த்தை நடத்தினார் பியூஷ் கோயல். ஆனால், எந்த முடிவும் எட்டப்படவில்லை. தொடர்ந்து இழுபறியே நீடித்தது. குறிப்பாக, இந்த கூட்டணிக்கு யார் தலைவர் என்றே தெரியாத நிலை உள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் விமானம் மூலம் மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. பேச்சுவார்த்தை கூட்டம் தொடர்பாக பேட்டியளித்த பியூஸ் கோயல், ‘தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தேர்தல் வெற்றி குறித்து மட்டுமே ஆலோசனை நடத்தினோம்’ என தெரிவித்தார்.
பிரதமர் மோடி தமிழகம் வருகைக்கு முன்பே, என்டிஏ கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில், மோடி 2 முறை தமிழகம் வந்த பின்னும் இன்னும் தொகுதி பங்கீடு நிறைவடையாததால் அமித்ஷா கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் பிரதமர் மோடி வந்தபின்னும் கூட்டணி இறுதி செய்யப்படாததால் கடும் கோபம் அடைந்த அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியை உடனடியாக டெல்லிக்கு வரும்படி அழைத்தார்.
அமித்ஷாவின் உத்தரவை ஏற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று காலை 10.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
அவருடன் வேறு யாரும் செல்லவில்லை. டெல்லி சென்ற எடப்பாடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று இரவு 9 மணிக்கு சந்தித்தார். அவருடன் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு தூதுவர் உடன் இருந்தார். அப்போது, அதிமுக – பாஜ கூட்டணியில் ஏற்பட்டுள்ள இழுபறி குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜ 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்றும், அதாவது 80க்கும் மேற்பட்ட தொகுதிகள் வேண்டும் என்றும் அமித்ஷா கேட்டுள்ளார். எங்களுடன் கூட்டணி சேர்ந்துள்ள கட்சிகளுக்கு நாங்களே சீட் ஒதுக்குகிறோம் என்று கூறியுள்ளார்.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி மற்றும் கடந்த 2024 மக்களவை தேர்தலில் தனி அணியாக நின்று 18 சதவீதம் வரை வாக்குகளை பெற்றதை சுட்டிக்காட்டி கூடுதல் தொகுதிகளை அமித்ஷா கேட்டுள்ளார். கடைசியாக, ‘‘பாமகவுக்கு மட்டும் நீங்கள் சீட் ஒதுங்கிக் கொள்ளுங்கள். அதில் அன்புமணிக்கு 18 சீட், ராமதாசுக்கு 5 சீட் ஒதுக்குங்கள். டிடிவி.தினகரன், வாசன், ஐஜேகே, புதிய நீதிக்கட்சி, தமிழக முன்னேற்றக்கழகம், பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுக்கு நாங்கள் சீட் கொடுக்கிறோம். கடைசியாக 55 சீட்டுக்கு குறையமாட்டோம். அதில் டி.டி.வி.தினகரனுக்கு 10, வாசனுக்கு 3 மற்றவர்களுக்கு தலா ஒரு சீட் வழங்க உள்ளோம். நாங்கள் 38 தொகுதிகளில் நிற்கப்போகிறோம்.
அன்புமணிக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுங்கள். முடிந்தால் வாசனுக்கும் ஒரு எம்பி சீட் கொடுங்கள் என்று அமித்ஷா கூறியதாக கூறப்படுகிறது. அன்புமணிக்கு மட்டும் ராஜ்யசபா சீட் வழங்க எடப்பாடி சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அமித்ஷாவின் பேச்சில் கொஞ்சம் மிரட்டல் தொனி இருந்ததால், கடைசியாக பாஜ தலைவர்களை அனுப்புங்கள். சென்னையில் இறுதி செய்கிறோம் என்று எடப்பாடி கூறியுள்ளார். இதனால் அமித்ஷா கூறியதுபோல 55 தொகுதிகளை பாஜ கூட்டணிக்கு எடப்பாடி ஒதுக்குவார் என்று கூறப்படுகிறது. அதிமுக 156 தொகுதிகளில் போட்டியிடும். அதில் புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்று கூறப்படுகிறது. அமித்ஷாவுடன் 2 மணி நேரம் ஆலோசனை நடத்திய எடப்பாடி இரவு 11 மணிக்கு வெளியே வந்தார். அமித்ஷா கூறியதுபோல 55 தொகுதிகளை பாஜ கூட்டணிக்கு எடப்பாடி ஒதுக்குவார் என்று கூறப்படுகிறது, அதிமுக 156 தொகுதிகளில் போட்டியிடும்.
* எடப்பாடி மீது கொதிப்பில் அதிமுகவினர்
மதுரையில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு அதிமுகவினர் ஆட்களை திரட்டி கொண்டு சென்றதை பார்க்கும்போது பாஜவை விட ஓவராக கூவுகிறார்களோ என்ற எண்ணம் அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளதாக பேசப்படுகிறது. மதுரை கூட்டத்துக்காக அதிமுகவினர் கடந்த 10 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலோசனை கூட்டங்களை தமிழ்நாடு முழுவதும் நடத்தி இருக்கிறார்கள் என்ற தகவல் இதனை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது. ஜெயலலிதா இருந்தவரை பிரதமர் மோடியாக இருந்தாலும் யாராக இருந்தாலும் போயஸ் தோட்டத்தை நாடிச் சென்று தான் பழக்கம். ஆனால் மதுரைக்கு அமித்ஷாவும் மோடியும் வருகிறார்கள் என்றால் அதற்கு முதல் நாளே எடப்பாடி ஆஜராவது என்ன வகையான மனநிலை என தெரியவில்லை என அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி மீது கொதிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
* நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அமித்ஷா – எடப்பாடி ஆகியோர் டெல்லியில் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை குறித்து விவாதிப்பதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை பிற்பகல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில், பாஜ தரப்பில் இருந்து அதிக தொகுதிகள் கேட்பது குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
* போலீஸ், கலெக்டர்கள் மீது புகார்
தமிழகத்தில் உள்ள மாவட்ட எஸ்பிக்கள், கலெக்டர்களை மாற்ற வேண்டும் என்று ஒரு பட்டியலை எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. பட்டியலை பெற்றுக் கொண்ட அமித்ஷா, இதை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார்.
