கடலுார், மார்ச் 3: கடலூர் தலைமை தபால் நிலையத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் திருச்சி, சென்னை, மதுரை, கோவை ஆகிய நான்கு இடங்களில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன. நேற்று திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, இ மெயிலில் தகவல் வந்தது. இதையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அதில் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து மண்டல அலுவலகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மாவட்ட அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் நேற்று மாலை கடலூர் தலைமை தபால் நிலைய வளாகத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சோதனைக்கு பின் எதுவும் கண்டெடுக்கப்படாததால் இ மெயில் தகவல் புரளி என தெரிந்தது.
