போச்சம்பள்ளி சாலையில் இறைச்சி கழிவுகள் அகற்றம்

*தினகரன் செய்தி எதிரொலி

போச்சம்பள்ளி : போச்சம்பள்ளியில் இருந்து கல்லாவி செல்லும் சாலையில், கொட்டிய இறைச்சி கழிவுகள், தினகரன் செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டது. போச்சம்பள்ளியில் இருந்து கல்லாவி, ஊத்தங்கரை, ஒலப்பட்டி, சாமலமரத்துப்பட்டி, ஆனந்தூர் கேட், தாதம்பட்டி, மாவுத்தூர், புலியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாகவும் மற்றும் மேல்மருவத்தூர், மேல்மலையானூர், திருவண்ணாமலை உள்ளிட்ட கோயில்களுக்கு செல்பவர்கள் கல்லாவி சாலையான போச்சம்பள்ளி ராசி நகர், அரசு மேல் நிலைப்பள்ளி வழியாக சென்று வருகின்றனர். மேலும் அவ்வழியாக அரசு பள்ளி, அரசு மருத்துவமனை, நூலகம், தனியார் பள்ளிகள் என செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இங்கு பல்வேறு பகுதிகளில் உள்ள கோழி, மீன், கடைகள், ஆடு இறைச்சி, கடைகளில் சேகரமாகும் கழிவுகளை மூட்டை கட்டி, இரவு நேரத்தில் டூவீலர்களில் கொண்டு வந்து வீசி செல்கிறார்கள். இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால், குடியிருப்போர்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதை அகற்ற வேண்டும் என கடந்த 23ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள் துப்புறவு பணியாளர்களை கொண்டு உடனடியாக கோழிகழிவுகள் மற்றும் குப்பை கூளங்களை நேற்று அகற்றினர்.

Related Stories: