உடுமலை அருகே கி.பி. 12ம் நூற்றாண்டை சேர்ந்த தன் தலையை தானே அறுத்து பலியிட்ட திருநங்கை தற்பலி சிற்பம் கண்டுபிடிப்பு

உடுமலை : உடுமலை அருகே கி.பி. 12ம் நூற்றாண்டை சேர்ந்த திருநங்கை பலி சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: திருப்பூர் மாவட்டம் கொழுமத்துக்கு கிழக்கே குதிரையாற்றின் கரையில் ஒரு பாழடைந்த கோயில் உள்ளது. இக்கோயிலை ஆய்வு செய்த போது இந்த பலி சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.

அலங்காரங்களுடன் உள்ள ஒரு பெண்மணி (திருநங்கை) தன்தலையை தானே அறுத்துக் கொள்வது போன்று இச்சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வகை சிற்பங்களுக்கு நவகண்ட சிற்பங்கள் அல்லது தற்பலிச்சிற்பங்கள் என்பது பெயர்.

பொதுவாக கடவுளுக்கு ஆடு, கோழி போன்ற உயிரினங்கள் பலியிடப்படும். ஆனால், உச்ச கட்டமாக மனிதர்களே பலி கொடுக்கப்படுவதும் பண்டைய காலத்தில் வழக்கத்தில் இருந்தது. இவ்வகையான தற்பலியும் சுயவிருப்பத்தின் அடிப்படையில் யாருடைய வற்புறுத்தலும் இன்றி நடை பெறும். அதன் அடையாளமாக பலி கொடுப்பவர் தன் தலையை தானே அறுத்து பலி கொடுப்பார்.

அவர் இறந்த பின் அவர் நினைவாக ஊர் மக்கள் இது போன்ற சிற்பத்தை வடிவமைத்து அவர் தியாகத்தை போற்றி வணங்குவது பண்டைய வழக்கம்.இவ்வகையான தற்பலிகள் ஏதாவது வேண்டுதல் பொருட்டு கொற்றவை தெய்வத்தின் முன்பு கொடுக்கப்படும்.

தற்பலி கொடுத்தவரின் குடும்பத்துக்கு ஊர் மக்களும், அரசும் நிலங்களை கொடை அளிப்பது அன்றைய வழக்கமாய் இருந்தது. இவ்வாறான பலிகளுக்காக கொடுக்கப்படும் நிலங்கள் உதிரப்பட்டி நவகாணி நெய்த்தோர்பட்டி உதிரக்காணி போன்ற பெயர்களில் அழைக்கப்படுவதை தமிழகத்தின் பல கல்வெட்டுகளின் மூலம் அறியலாம்.

இங்கு தற்பலி கொடுத்த பெண்மணி (திருநங்கை) அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடை அணிகலன்களுடன் காணப்படுகிறார். தலையில் அள்ளிமுடிந்த அழகிய கொண்டை, நெற்றிச்சுட்டி, நெற்றி பொட்டுடன் காணப்படுகிறார்.

கழுத்தில் கண்டிகை, சரப்பளி, ஆரம் ஆகிய அணிகலன்கள் உள்ளன. இரண்டு கைகளும் ஒரு நீண்ட வாளை கழுத்தின் பின்புறம் வைத்து அழுத்திய நிலையில் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறுகிய மார்பகங்களுடன் இடை முதல் தொடை வரை மட்டுமே உள்ள ஆடை அணிந்துள்ளார்.

இடையின் இரு பகுதிகளிலும் முன் பகுதியிலும் உள்ள கொசுவம் இவர் ஒரு நாட்டிய நங்கை என்பதை உறுதிப்படுத்துகிறது. எனவே, இவர் அருகில் உள்ள கொழுமம் வீர சோழீஸ்வரர் கோயில் தேவரடியாராக இருந்திருப்பார் எனக் கருதலாம். சிற்பத்திலோ அருகிலோ கல்வெட்டுகள் ஏதும் இல்லாததால் மேல் விவரங்களை அறிய இயலவில்லை.

சிற்பத்தின் வடிவமைப்பை கொண்டு இச்சிற்பம் கி.பி.12ம் நூற்றாண்டு என உறுதிப்படுத்தலாம். தற்பலி செய்த இப்பெண்மணி நாட்டிய நங்கையாக, கோயில் தேவரடியாராக மூன்றாம் பாலினத்தவராக திருவின் நங்கை எனும் பெயரில் இருந்திருப்பார் என கருதலாம்.

இந்த சிற்பத்துக்கு அருகே உள்ள குளமும் தேவரடியார் குளம் என்று அழைக்கப்படுவதால், பலி கொடுத்த இப்பெண்ணின் (திருநங்கையின்) பெயராலேயே இக்குளம் அழைக்கப்படுகிறது என்றும் கருதலாம்.பொதுவாக நவகண்டம் எனும் தற்பலி கொற்றவை தெய்வத்துக்கு முன்பே கொடுக்கப்படும். இப்பெண்மணி (திருநங்கை) எதற்காக தன்னைத் தானே பலி கொடுத்துக்கொண்டார் எனத்தெரியவில்லை.

மகாபாரதத்தில் அரவான் குருசேத்திர போர் தொடங்கும் முன்பு நவகண்டம் செய்து கொண்டதாக குறிப்பு இருக்கிறது. இவரும் தனது அரசனின் ஏதோ ஒரு போருக்காக தன்னைத்தானே பலி கொடுத்திருக்கலாம். அதை அடிஒற்றி இங்கு நவகண்டம் கொடுக்கப்பட்ட தாகக்கருதலாம்.

காரணம் எதுவாக இருந்தாலும் அப்பாவியான இவரின் மரணத்தை ஏற்க மனம் மறுக்கிறது. இது தமிழகத்தில் கண்டறியப்படும் முதல் திருநங்கை நவகண்டச் சிற்பமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: