*ரூ.25 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் 21 வார்டுகளிலும் நகராட்சி சார்பில் தினமும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என ஊழியர்கள் தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர். அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை துருகம் சாலையில் உள்ள எரிவாயு தகனமேடை அருகில் உள்ள குப்பைகள் குடோனில் கொட்டப்பட்டு, அதன் மூலம் உரம் தயாரிக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போது இக்குடோனில் சுமார் 5 டன் அளவுக்கு குப்பைகள் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அங்கிருந்த குப்பைகள் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், குடோனுக்கும் தீ பரவி அங்கிருந்த குப்பைகளும், உரம் தயாரிப்பதற்காக பயன்படும் இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது.
இதுகுறித்து தகவலறிந்ததும் நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்களும் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சம்பவ இடத்துக்கு விரைந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் கூடுலாக தீயணைப்பு வாகனங்களை வரவழைத்து தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே குப்பை கிடங்கு அருகே உள்ள எரிவாயு தகனமேடையில் சுமார் 5க்கும் மேற்பட்ட நிரப்பட்ட சிலிண்டர்கள் இருந்த நிலையில், அவைகளை தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றினர்.
இதனால் பெரிய அளவிலான விபத்து சம்பவம் தவிர்க்கப்பட்டது. இத்தீவிபத்தில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
