மாஞ்சோலை மலைப்பகுதியில் 400 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து: 4 பேர் படுகாயம்

நெல்லை : நெல்லை மாவட்டம் மாஞ்சோலை மலைப்பாதையில், தேயிலை தொழிற்சாலை தளவாடப்பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். நெல்லை மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி மற்றும் ஊத்து ஆகிய பகுதிகளில் இருந்த தேயிலை தொழிற்சாலைகள் தனியார் நிர்வாகத்தால் அண்மையில் கைவிடப்பட்டு மூடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அங்குள்ள தொழிற்சாலைகளில் உள்ள விலைஉயர்ந்த இரும்பு தளவாடப்பொருட்களை சமவெளிப் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அதன்படி நேற்று நாலுமுக்கு தேயிலை எஸ்டேட் தொழிற்சாலையிலிருந்து பல டன் எடையுள்ள இரும்புப்பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோயம்புத்தூரை நோக்கிக் புறப்பட்டது.
கனமான இரும்பிலான பொருட்களை ஏற்றிக்கொண்டு மணிமுத்தாறு நோக்கி லாரி மாஞ்சோலை மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தபோது, ஒரு குறுகிய வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலைக்குக்கீழே இருந்த 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. பலமுறை உருண்டு விழுந்ததில் லாரி முற்றிலும் நசுங்கியது.

இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த நாலுமுக்கு பகுதியைச்சேர்ந்த சசிக்குமார் (53), சுப்பிரமணியன் (45), அப்துல்காதர் (56), விகேபுரம் சங்கரநாராயணன்(35), கோயம்பத்தூர் முஹம்மது ஹாருன் (60), கல்லிடைக்குறிச்சி மாடசாமி (42) ஆகிய 6 பேர் காயமடைந்தனர். லாரி கவிழ்ந்த போது கல்லிடைக்குறிச்சி தேவாலய பாதிரியார் ஆண்ட்ரூஸ் அப்பகுதியில் பேருந்திற்காக காத்திருந்த பொதுமக்கள் உதவியுடன் 6 பேரையும் மீட்டு அம்பை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் படுகாயமடைந்த 4 பேர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். லேசான காயமடைந்த 2பேர் அம்பை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். மாஞ்சோலை மலைப்பாதை மிகவும் குறுகிய வளைவுகளையும், செங்குத்தான சரிவுகளையும் கொண்டது. இப்பகுதியில் வாகனங்களை ஓட்டுவதற்கு மிகுந்த அனுபவம் தேவை.

ஆனால், சமவெளிப்பகுதியிலிருந்து வந்த அனுபவம் இல்லாத ஓட்டுநர், மலைப்பாதையின் ஆபத்தை உணராமல் லாரியை இயக்கியதே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: