ஊட்டி : ஊட்டியில் உள்ள பழைய ரேஸ்கோர்ஸ் மைதான புல்வெளிகளில் முகாமிடும் வெள்ளை நாரைகள் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம், ஊட்டி நகரின் மையப்பகுதியில் ரேஸ்கோர்ஸ் மைதானம் அமைந்துள்ளது.
நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இந்த ரேஸ்கோர்ஸ் மைதானம் விளங்கி வருகிறது. காலை நேரங்களில் இந்த மைதான புல்வெளிகளில் வெள்ளை நாரைகள் கூட்டம் கூட்டமாக முகாமிடுவது வாடிக்கையாக உள்ளது.
இப்பகுதியில் இயற்கையாக உருவாகியுள்ள சதுப்பு நிலங்களும்,ஈரப் புல்வெளிகளும் இந்நாரைகளுக்கான சிறந்த முகாமிடம் இடமாக மாறியுள்ளது.கூட்டமாகச் சேர்ந்த அவை, தங்களுக்கே உரிய ஒலிகளால் ஒன்றோடு ஒன்று உரையாடிக் கொண்டிருக்கும் காட்சி, பார்வையாளர்களை சில நிமிடங்கள் நிறுத்தி விடும் அளவிற்கு மனதை கவர்கிறது.ரேஸ்கோர்ஸ் புல்வெளிப் பகுதிகளில் காணப்படும் புழு, பூச்சிகள் மற்றும் சிறு உயிரினங்களே இந்நாரைகளின் முக்கிய உணவாக இருக்கின்றன.
காலை நேரங்களில் நடைபயிற்சி செல்லும் உள்ளூர் மக்களும், ஊட்டிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளும் இவற்றை பார்த்து மகிழ்கின்றனர். இது குறித்து பறவைகள் ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘நவம்பர் முதல் மார்ச் வரையிலான குளிர் காலங்களில் வடமாநிலங்களில் இருந்து பல்வேறு வகை பறவையினங்கள் நீலகிரிக்கு வலசை வரும்.கிரீன் லீப் வாப்லர் போன்ற சில பறவையினங்கள் பனிக்காலத்தில் இமாலய பகுதிகளில் இருந்து வருகின்றன.
இதுதவிர சதுப்பு நிலங்கள் மற்றும் நீர் நிலைகளில் காணக்கூடிய சாம்பர் நாரை,ஸ்பாட் பில் டக், கேட்டில் ஈகிரட், காமன் கூட் போன்ற நீர் பறவைகளும் அதிகளவு வந்துள்ளன. இவைகள் ஊட்டி ஏரி, கிளன்மார்கன், பைக்காரா அணை, மாயார் போன்ற நீர் நிலைகள் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் காணப்படும் சிறு நீர் குட்டைகள் போன்றவற்றில் காணப்படுகிறது’’ என்றனர்.
