சண்டே மார்க்கெட்டில் பொருட்களை வாங்க அலைமோதிய கூட்டம்

புதுச்சேரி : புதுச்சேரியின் அடையாளங்களில் ஒன்று, காந்தி வீதி சண்டே மார்க்கெட். வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் நடக்கும் தெரு சந்தை தான் இது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் சண்டே மார்க்கெட்டில் ஆடைகள், பழைய புத்தகங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், கைவினை பொருட்கள், சைக்கிள்கள், பழைய எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் பொருட்கள்,, மரவேலைப்பாடு பொருட்கள் மலிவு விலையில் விற்கப்படுகிறது.

சண்டே மார்க்கெட்டில் கிடைக்காத பொருட்களே இல்லை என்று கூறலாம். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி புதுச்சேரி ஒட்டியுள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்களின் விருப்பமான ஷாப்பிங் பஜாராக இது விளங்குகிறது.

இந்நிலையில் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாலை, சண்டே மார்க்கெட்டில் பொருட்களை கூட்டம் அலைமோதியது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பொருட்களை வாங்கிச் சென்றனர். இதனால் சண்டே மார்க்கெட்டில் விற்பனை நேற்று களைகட்டியது.

சாலையில் ஓடிய கழிவுநீர்

ரங்கப்பிள்ளை வீதி- காந்தி வீதி சந்திப்பில் சாலையின் நடுவே உள்ள பாதாள சாக்கடை தொட்டி நிரம்பி, அதிலிருந்து கழிவுநீர் பீறிட்டு வெளியேறி, அங்கு ஆறு போல் ஓடியது. இதனால் அந்த பகுதியே துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

சண்டே மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க வந்தவர்கள், இந்த கழிவுநீரை மிதித்து செல்லும் நிலை ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: