திமுக கூட்டணியில் வெற்றி முரசு கொட்ட தயாராகும் தேமுதிக

மக்கள் நலப்பணிகளால் கிராமங்களில் அதிகளவில் நற்பணி மன்றங்களை உருவாக்கியிருந்த விஜயகாந்த், மதுரையில் 14.9.2005 அன்று மிகப்பெரிய மாநாட்டை நடத்தி தேமுதிக எனும் அரசியல் கட்சியை தொடங்கினார். 2006 பொதுத்தேர்தலில் அக்கட்சி 232 தொகுதிகளில் தனித்து களமிறங்கியது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த், 61,337 வாக்குகள் பெற்று வெற்றிபெற்று முதன்முதலில் எம்எல்ஏவாகி சட்டசபைக்கு சென்றார். இத்தேர்தலில் தேமுதிக ஒட்டுமொத்தமாக 27 லட்சத்து 64 ஆயிரம் வாக்குகள் பெற்றது.

இது 8.45 சதவீதம் ஆகும். அதன்பின்னர் 2009 நாடாளுமன்ற தேர்தலிலும் தேமுதிக தனித்து போட்டியிட்டு 10.45 சதவீத வாக்குகளை பெற்று, தமிழகத்தில் 3வது பெரிய கட்சியாக உருவெடுத்தது. 2011 சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. இதில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, 29 இடங்களில் வெற்றிபெற்றது. ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் 91,164 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவரானார்.

இதற்கிடையே, தேமுதிகவில் இருந்த 8 எம்எல்ஏக்கள் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திடீரென எடுத்தனர். இதனால் அதிமுக- தேமுதிக கூட்டணி விரிசல் உருவான நிலையில், சட்டசபையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு தேமுதிகவில் இருந்து விலகாமல் அதிருப்தி எம்எல்ஏக்களாக செயல்பட்டு வந்த 8 எம்எல்ஏக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை விஜயகாந்த் இழக்கும் நிலை ஏற்பட்டது.

பின்னர் நடைபெற்ற 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜ, மதிமுகவுடன் இணைந்து தேஜ கூட்டணியில் 14 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. அப்போது, தேமுதிவுக்கு 5.1% வாக்குகள் மட்டுமே கிடைத்தது. அதன்பிறகு 2016 பொதுத்தேர்தலில் வைகோ முயற்சியால் மக்கள் நலக் கூட்டணியில் 104 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக, ஒரு தொகுதியில் கூட கரைசேரவில்லை. அந்த கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக உளுந்தூர்பேட்டையில் களமிறங்கிய விஜயகாந்த் தோல்வி அடைந்தார்.

பின்னர் உடல்நலக் குறைவு ஏற்பட தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிய விஜயகாந்த் 28.12.2023 அன்று காலமானார்.  கூடா நட்பு கேடாய் முடியும் என்கிற கதையாய் தேமுதிகவின் கூட்டணி கட்சிகள் சரியில்லாததால், தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல்களிலும், சட்டமன்ற தேர்தல்களிலும் தோல்வியை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக இம்முறை வெற்றி ஒன்றே குறிக்கோள் என்ற முடிவுக்கு வந்த தேமுதிக, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி திமுக கூட்டணியில் இணைந்தது.

தற்போது தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்திருப்பதன் மூலம் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மீண்டும் சட்டசபைக்குள் தங்கள் கட்சியின் பிரதிநிதிகள் கால்பதிப்பர் என்ற நம்பிக்கை அக்கட்சி நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கட்சியின் ெபாதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் மீண்டும் வெற்றி முரசு கொட்ட தேமுதிக தயாராகிவிட்டது என்று தொண்டர்கள் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

Related Stories: