நாகர்கோவில்:நாகர்கோவில் அருகே இறச்சக்குளம் பகுதியை சேர்ந்தவர் சார்ஸ் தனபாலன். அவரது மகன் விஷால் (21). சட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த 21ம் தேதி, இரவு சுமார் 8.30 மணியளவில் பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உடனடியாக அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் விஷால் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக கடந்த 27ம்தேதி, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் விஷாலுக்கு மூளை சாவு ஏற்பட்டது தெரிய வந்தது. இந்த தகவலை அவரது குடும்ப உறுப்பினர்களிடம் டாக்டர்கள் எடுத்துக்கூறி உடல் உறுப்புகள் தானம் குறித்து விளக்கினர்.
இதையடுத்து உடல் உறுப்புகளை தானம் செய்ய விஷால் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி இன்று உடல் உறுப்புகளை தானமாக எடுப்பதற்கான அறுவை சிகிச்சைகள் நடந்தன. கல்லீரல், இரு சிறுநீரகம், இரு கரு விழிகள் மற்றும் தோல் தானமாக எடுக்கப்பட்டன. பின்னர் பிரேத பரிசோதனை நடந்து, விஷால் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டு இருந்த விஷால் உடலுக்கு, மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் லியோ டேவிட், டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவ, மாணவிகள் மரியாதை செலுத்தினர்.
