நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடிக்கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசிக்கொடை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின்போது கேரள, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இந்த ஆண்டின் மாசிக்கொடை விழா இன்று காலை திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா 10ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை, 8.9 மணியளவில் திருக்கொடியேற்றம் ஆகியவை நடந்தது.
கோயில் தந்திரி சங்கரநாராயண ஐயர் திருக்கொடி வைத்தார். இதில் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கெளரி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அதைத்தொடர்ந்து மாநாடு திடலில் இந்து சேவா சங்க 89 வது சமய மாநாடு கொடியேற்று நடந்தது. இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நண்பகல் 12 மணியளவில் கருமண்கூடல் கே.எஸ்.வி. பவனிலிருந்து மண்டைக்காடு அம்மனுக்கு சீர் கொண்டு வரப்பட்டது. மதியம் 1 மணிக்கு உச்சபூஜை, தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலை தங்கத்தேர் பவனி மற்றும் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பூஜையும், 9000 திருவிளக்கு பூஜையும் நடக்கிறது.
