தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்

சென்னை: தமிழக காவல்துறையில் நிர்வாக வசதிக்காக டிஜிபி மற்றும் எஸ்பி அந்தஸ்திலான 20 உயர் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை ஆயுதப்படை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், தற்போது காலியாக உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது பழைய பொறுப்பான ஆயுதப்படை டிஜிபி பதவியையும் கூடுதலாகக் கவனிப்பார். அதேபோல், கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த கூடுதல் டிஜிபி எச்.எம். ஜெயராம் புதிதாக உருவாக்கப்பட்ட குடிமை தற்காப்புத் துறை இயக்குநராகவும், ஊர்க்காவல் படை கூடுதல் கமாண்டன்ட் ஜெனரலாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐஜி அந்தஸ்திலான அதிகாரிகளில் ஆவடி கூடுதல் ஆணையராக இருந்த பவானீஸ்வரி சென்னை டிஜிபி அலுவலக தலைமையிட ஐஜியாகவும், ரயில்வே ஐஜியாக இருந்த ஏ.ஜி. பாபு நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாகவும் மாற்றப்பட்டனர். சரக அளவிலான மாற்றங்களில் கோவை சரக டிஐஜி சசி மோகன் திண்டுக்கல் சரகத்திற்கும், திண்டுக்கல் சரக டிஐஜி சாமிநாதன் கோவை சரகத்திற்கும் பரஸ்பரம் மாற்றப்பட்டுள்ளனர். நெல்லை மாநகர காவல் ஆணையராக இருந்த மணிவண்ணன் ராமநாதபுரம் சரக டிஐஜியாகவும், அங்கு பணியாற்றிய தேஷ்முக் சேகர் சஞ்சய் நெல்லை மாநகர காவல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தாம்பரம் மாநகர காவல் இணை ஆணையர் ஜெயந்தி தொழில்நுட்பப் பிரிவு டிஐஜியாகவும், தொழில்நுட்பப் பிரிவில் இருந்த ஜெயலட்சுமி தாம்பரம் மாநகர இணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல், சென்னை ஆயுதப்படை டிஐஜி விஜயலட்சுமி திருச்சி ஆயுதப்படை டிஐஜியாகவும், சிபி சக்கரவர்த்தி திருச்சி சரக டிஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட எஸ்பி அளவிலான மாற்றங்களில், செங்கல்பட்டு எஸ்பி சிபின் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கும், ராணிப்பேட்டை எஸ்பி அய்மன் ஜமால் செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

ரயில்வே பிரிவில், சென்னை சைபர் க்ரைம் எஸ்பி ஆதர்ஷ் பசேரா திருச்சி ரயில்வே எஸ்பியாகவும், ராஜன் சென்னை ரயில்வே எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டனர். மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பியாக ஷியாமளா தேவியும், மதுரை அமலாக்கப்பிரிவு எஸ்பியாக சாம்சனும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கோவை மற்றும் மதுரை மாநகர தலைமையிட துணை ஆணையர்களாக ராஜேஸ்வரி மற்றும் திவ்யா ஆகியோர் பரஸ்பரம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றங்கள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: