உரிய காலத்திற்குள் மேல் முறையீடு செய்யாமலிருக்கும் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசின் கோப்புகளை கையாளும் அதிகாரிகள் சோம்பேறித்தனமாக உள்ளதாக கண்டித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், உரிய காலத்துக்குள் மேல்முறையீடு செய்யாமல் காலதாமதம் செய்யும் அதிகாரிகள் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தனியார் அறக்கட்டளை தொடர்பான வழக்கில் அதற்கு சாதகமாக உயர் நீதிமன்ற தனி நீதிபதி 2021ம் ஆண்டு தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை மாநகராட்சி கமிஷனர், இணை கமிஷனர், மண்டல அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் 2025ம் ஆண்டு மேல்முறையீடு செய்துள்ளனர்.

சுமார் 1,421 நாட்கள் காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்கவேண்டும் என்று மாநகராட்சி தரப்பில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், 2021 அக்டோபர் 7ம் தேதி பிறப்பித்த தீர்ப்பு நகல் மாநகராட்சி அலுவலகத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக வருவாய் துறை அதிகாரிகள், கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில்தான் தங்களுக்கு அளித்தனர். அதனால், காலதாமதம் ஏற்பட்டு விட்டது என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோப்புகளை கையாளும் அதிகாரிகள் முற்றிலும் சோம்பேறித்தனமாக, எதுவும் செய்யாமல் இருந்துள்ளனர். மேல்முறையீடு செய்வதில், இதுபோல் காலதாமதமாக செயல்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் மேல்முறையீடு செய்ய அவகாசம் கேட்கும் இந்த மனுவை ஏற்கமுடியாது. அதனால், இதை தள்ளுபடி செய்கிறோம். இதேபோல் ஏராளமான வழக்குகளில் குறித்த நேரத்தில் மேல்முறையீடு செய்யாமல், நீண்ட காலதாமத்துக்கு பின்னர் இந்த வழக்கில் கேட்பதுபோல தவறான காரணங்களை கூறி அரசு அதிகாரிகள் அனுமதி கேட்கின்றனர்.

இந்த காலதாமதத்துக்கு ஒன்று அதிகாரிகளின் அலட்சியமாக இருக்கலாம். அல்லது எதிர்தரப்பினரோடு கை கோர்த்து உடந்தையாகியிருக்கலாம். எனவே, உரிய காலத்துக்குள் மேல்முறையீடு செய்யாமல் காலதாமதம் செய்யும் அதிகாரிகள் குறித்து அவர்களுக்கு மேல் உள்ள உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். குறிப்பாக இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையின் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதுபோன்ற வழக்குகளில் நடவடிக்கை எடுப்பதற்காக இந்த தீர்ப்பு நகலை தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: