ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பின்னர் சிலுவை பாதை, இரவு புனிதரின் தேர்பவனி நடைபெற்றது. இரண்டாம் நாளான நேற்று காலை 6.30 மணிக்கு மேல் இருநாட்டு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. ஆன்மிகம் செழிக்க, இரு நாடுகள் இணைந்து செயலாற்ற, செல்வம் பெருக திருப்பலி பூஜை தமிழிலும், சிங்கள மொழியிலும் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.
இம்முறை யாழ்ப்பாணம், நெடுந்தீவு மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், திருப்பலி பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்திய பக்தர்கள் 3,741 பேரும், இலங்கை பக்தர்கள் 6 ஆயிரம் பேர், மேலும் அதிகாரிகள், விழா குழுவினர், ஏற்பாட்டாளர்கள் என மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் 8 ஆயிரம் பக்தர்களுக்கே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், இலங்கையில் இருந்து கூடுதலாக 2 ஆயிரம் பேர் வந்ததால் மிகுந்த நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு கடந்து செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.
திருவிழா முடிந்து நேற்று காலை 9.30 மணிக்கு மேல் இருநாட்டு பக்தர்களும் ஆலய வளாகத்தில் இருந்து படகுகளின் இறங்குதளம் உள்ள கடற்கரையில் குவிந்தனர். இருநாட்டு பக்தர்களுக்கும், கடற்படையினருக்கும் தனித்தனியாக கடல் பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. இப்பினும் பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட படகுகளில் ஏறி செல்ல கடும் அவதி அடைந்தனர். இலங்கை கடற்படையினர் எவ்வித வழிகாட்டுதல்களையும் அளிக்காததால் பக்தர்கள் கடற்கரை வெயிலில் பல மணி நேரம் காத்துக் கிடந்தனர். குடிநீர், நிழற்பந்தல் போதுமான அளவு அமைக்காததால் வெயிலின் தாக்கத்திற்கு ஆளான பக்தர்கள் கடும் சிரமத்தை அனுபவித்தனர். பலர் மயக்கம் அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த இருநாட்டு பக்தர்களும் ஒலிபெருக்கியில் விழா ஏற்பாட்டு குழுவினரை கடுமையாக குற்றம் சாட்டினர்.
