மே தின பூங்காவில் மகளிர் சுயஉதவிக் குழுவினரின் மகிழ் கபே: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: மே தின பூங்காவில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் ‘மகிழ் கபே’ கடையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற 2021 முதல் நேற்று வரை 6லட்சத்து 23 ஆயிரத்து 639 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 81லட்சத்து 5 ஆயிரத்து 877 மகளிருக்கு 1 லட்சத்து 44 ஆயிரத்து 91 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 2024-25ம் ஆண்டு மானிய கோரிக்கை விவாதத்தின் போது சட்ட மன்றத்தில் சென்னை பெருமாநகராட்சியில் 7 இடங்களில் ”மகிழ் கபே” அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அதை தொடர்ந்து தொல்காப்பிய பூங்கா, தலைமை செயலகம், கில் நகர் பூங்கா, ஜெய்நகர் பூங்கா, அறிஞர் அண்ணா பூங்கா, மே தின பூங்கா மற்றும் தமிழ்நாடு மகளிர் மகளிர் மேம்பாட்டு நிறுவன அலுவலக வளாகம் ஆகிய 7 இடங்களில் மகிழ் கபே சுமார் ஒவ்வொன்றும் தலா ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன. முதல்வர் 2025ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி பணிகள் நிறைவு பெற்ற தொல்காப்பிய பூங்காவில் அமைந்துள்ள மகிழ் கபேவை திறந்து வைத்தார். மகிழ் கபே நிர்வகிக்கும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ”மகிழ் கபே” செயல்பாடு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு தர சான்றிதழ் பெற்று தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் 3 முதல் 5 சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மகிழ் கபேவை செயல்படுத்தி வருகின்றனர்.

நடைமுறை செலவினங்கள் மற்றும் மகிழ் கபே நிறுவன செலவினங்களுக்காக சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் வாயிலாக கடன் இணைப்பு பெற்று தரப்பட்டுள்ளது. இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மே தின பூங்காவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்கு குழுவினரின் ”மகிழ் கபே” கடையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தலைமை செயலகம், கில் நகர் பூங்கா, ஜெய்நகர் பூங்கா, அறிஞர் அண்ணா பூங்கா மற்றும் தமிழ்நாடு மகளிர் மகளிர் மேம்பாட்டு நிறுவன அலுவலக வளாகம், மேலும் 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ”மகிழ் கபே” கடைகளையும் துணை முதல்வர் திறந்து வைத்தார்.

Related Stories: