சென்னை: திருப்பரங்குன்றம் முருகராவது மோடிக்கு நல்ல புத்தியை கொடுக்கட்டும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு இடங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தார். அந்த வகையில் திருவிக நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 71வது வார்டு பெரம்பூர் நெல்வயல் சாலையில் நூலகம் கட்டிடம் கட்டும் பணி, 72வது வார்டு பகுதியில் பழைய வெங்கடேசபுரம் மற்றும் வஉசி நகரில் பல்நோக்கு மையக் கட்டிடம் கட்டும் பணி, 73வது வார்டு கிரே நகர் மற்றும் பழைய வாழை மாநகரில் உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்கா கட்டும் பணி, 75வது வார்டு சிவசண்முகபுரம் பகுதியில் பல்நோக்கு மையம் கட்டிடம் கட்டும் பணி, 75வது வார்டு தலைமைச் செயலக காலனி பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் 76வது வார்டு ஸ்டாரன்ஸ் சாலை மற்றும் கே.எம்.கார்டன் பகுதியில் பல்நோக்கு மைய கட்டிடம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சென்னை மாநகர மேயர் பிரியா, திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, நூலகத்துறை அலுவலர் கவிதா, வட்டார துணை ஆணையர் கவுசிக், மாமன்ற உறுப்பினர் சரவணன், மண்டல அலுவலர் சொக்கலிங்கம், செயற்பொறியாளர் சரவணன், திமுக பகுதி செயலாளர்கள் தமிழ்வேந்தன், சாமிகண்ணு, மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு திருப்பரங்குன்றத்திற்கு மோடி வருகை குறித்தான நிருபர்களின் கேள்விக்கு, திருப்பரங்குன்றம் முருகராவது மோடிக்கு நல்ல புத்தியை கொடுக்கட்டும் என தெரிவித்தார். ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது அதிமுகவிற்கு நல்ல காலம் என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கூறி இருக்கிறார்கள் என்பது குறித்தான கேள்விக்கு, வலுவிழந்தவர்களின் வார்த்தைகள் அப்படித்தான் இருக்கும். எனவே அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
