நல்லக்கண்ணுவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தாத விவகாரம்; உண்மையை மட்டும் பேசுங்கள் எதிர்கட்சி தலைவரே… எடப்பாடி பழனிசாமி மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாக்கு

சென்னை: எடப்பாடி பழனிசாமி தாயாரின் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது, எனவே உண்மையை மட்டும் பேசுங்கள் எதிர்கட்சி தலைவரே என இந்திய கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், தமிழக மக்களின் பேரன்புக்கும் போற்றுதலுக்கும் உரிய மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக காலமானார். எதிர்கட்சி தலைவர், அவரது மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த தவறியதன் மீது பொது மக்கள் மத்தியில் வினாவும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதற்கு எதிர்கட்சி தலைவர் “எனது தாயார் 2020-ல் காலமான போது கம்யூனிஸ்டு கட்சியினர் யாருமே வரவில்லை. இப்போது நான் ஏன் போகணும்” என சொல்லியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மூத்த அரசியல் தலைவரின் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் நேரில் வருவதும் மறுப்பதும் அவர்களது விருப்பம். தவிர்க்க முடியாத சூழல் காரணமாக வர இயலாமல் போவது இயல்பானது. ஆனால், எதிர்கட்சி தலைவர் உண்மை பேச வேண்டும்.எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானபோது, அவரது மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி தெரிவிக்க வேண்டும் என்ற கட்சியின் முடிவுப்படி இப்போதைய மாநில துணை செயலாளர் நா.பெரியசாமி, பொருளாளர் எம்.ஆறுமுகம் (முன்னாள் எம்எல்ஏ) இருவரும், அவரது கிராமத்து வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி தெரிவித்து, எடப்பாடியாரிடம் துக்கம் விசாரித்ததை ஏன் மறுத்தும், மறைத்தும் பேச வேண்டும்?

துக்க வீட்டில் அப்போதைய மதுவிலக்கு துறை அமைச்சர் பி.தங்கமணி, எம்.ஆறுமுகம், நா.பெரியசாமி ஆகியோரை அறிமுகம் செய்தபோது “ஆறுமுகத்தை எனக்கு நல்லா தெரியும்” என கூறியது மறந்து போனதா?
இந்த நிகழ்வின்போது வெளியூர் நிகழ்ச்சியில் இருந்த, கட்சியின் அப்போதைய மாநில செயலாளர் முத்தரசன், மாநில குழு உறுப்பினர் எஸ்.ஏழுமலை இருவரும் “முதலமைச்சர்” எடப்பாடி கே.பழனிசாமி, சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது அரசு இல்லத்திற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்து, அவரது தாயாரின் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி வந்தது அனைவரும் அறிந்த செய்தியாகும்.

எது எப்படியோ, அதிமுக நிறுவப்பட்ட காலத்தில் எம்ஜிஆருக்கு பக்கபலமாக இருந்து உதவிய, இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், அதன் தலைவர்கள் எம்.கல்யாண சுந்தரம், கே.பாலதண்டாயுதம், ப.மாணிக்கம் போன்ற தலைவர்களுடன் இணைந்து நின்றவர் நல்லகண்ணு என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். உண்மை பேசுங்கள். எதிர்கட்சி தலைவரே, உண்மையை மட்டும் பேசுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: