தமிழகத்தின் வட மாவட்டங்களில் செல்வாக்குடன் இருந்த பாமக தற்போது இரு அணிகளாக பிளவுபட்டு கிடக்கிறது. இதனிடையே மகன் அன்புமணியோ தனக்கான தேர்தல் கூட்டணியை முந்திக் கொண்டு அதிமுகவுடன் முடிக்க அவருக்கு ராஜ்ய சபா சீட்டு பரிசாக கிடைத்தது.இதற்கான தனது வேட்பு மனுவை நேற்று அவர் தாக்கல் செய்த நிலையில், கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தொடர்ந்து திணறி வரும் தந்தை ராமதாசோ, கடைசி நேர திருப்பமாக தனது உதவியாளர் சுவாமிநாதனை ராஜ்ய சபா வேட்பாளராக மனு போட வைத்தார். 10 எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாத மனு தள்ளுபடியாகும் என தெரிந்தும், அதை போட்டிருப்பதன்மூலம், அதிமுகவுடன் எப்படியாவது கூட்டணி
அமைத்துவிட வேண்டுமென்ற ராமதாஸின் அதீத விருப்பத்ைதயே இது வெளிக்காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
கூட்டணி தொடர்பான நிர்வாகிகளின் அழுத்தத்தால், நெருக்கடியில் இருந்த ராமதாஸ் நேற்று திடீரென 35 தொகுதிகளை தேர்ந்தெடுத்து அங்கு விருப்பமனு அளித்திருந்த மாவட்ட நிர்வாகிகளை அவசரமாக தைலாபுரம் வரவழைத்து ஆலோசித்தார். அப்போது தவெகவுடன் பயணிக்க பலர் விருப்பம் தெரிவித்த நிலையில், அங்கு நமக்கான கதவு திறக்கப்படாததை ராமதாஸ் சூசகமாக கூறிவிட்டதாக தகவல் கசிகின்றன. இதனால் நமக்கான ஒரே வாய்ப்பு இனி அதிமுக மட்டுமே என்ற முடிவுக்கு ராமதாஸ் மீண்டும் வந்ததாலே, உண்மையான பாமகவான தனக்குதான் இறுதியில் கட்சி அங்கீகாரத்தை நீதிமன்றம் வழங்கும் என்பதை அதிமுகவுக்கு வெளிப்படுத்தி அன்புமணிக்கு செக் வைக்கும் வகையிலே கடைசிநேரத்தில் சுவாமிநாதனை களமிறக்கி, அதன்மூலமாக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர முனைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதற்காக தனது மாவட்டத்தில் அதிமுகவில் செல்வாக்குடன் திகழும் மாஜி அமைச்சரான சிவி சண்முகம் எம்பியை தூதுவராக பயன்படுத்தி, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச தைலாபுர உறவுகள் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.இதன் காரணமாகவே தைலாபுரத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், கூட்டணி தொடர்பாக ராமதாஸ் என்ன சொல்கிறாரோ, அதன்படி நடப்போம் என்ற பதிலை மட்டுமே பதிவு செய்திருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
