தஞ்சை மாவட்ட அரசு ஐடிஐக்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் மாணவர்கள் நேரடி சேர்க்கை

தஞ்சை, பிப்.9: தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு ஐடிஐக்களில் பல்வேறு தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு நேரடி சேர்க்கை மூலம் மாணவர்கள் வருகிற 15ம் தேதி வரை சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலி இடங்கள் பல்வேறு தொழிற் பிரிவுகளில் உள்ளது. இதை நேரடி சேர்க்கை மூலம் வரும் 15ம் தேதி வரை பயிற்சியாளர்கள் சேர்க்கப்பட உள்ளனர். 10ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 14 வயது நிரம்பிய ஆண், பெண் அனைவரும் பயிற்சியில் சேரலாம். மகளிருக்கு கணினி பயிற்சி மற்றும் டெக்னீசியன், மெக்கட்ரானிக்ஸ் தொழிற்பிரிவுகள் உள்ளன. மகளிருக்கு வயது வரம்பு இல்லை. 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இரண்டும் அல்லது ஏதேனும் ஒன்றும், சாதி சான்றிதழ் அசல், மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஏடிஎம் கார்டு கொண்டு வர வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு பேருந்து பயணச் சலுகை அட்டை, மாதாந்திர உதவித்தொகை ரூ.750, தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், பாடப்புத்தகங்கள், வரைப்பட கருவிகள் போன்றவையும் இலவசமாக வழங்கப்படும். எனவே உடனடி வேலைவாய்ப்புகள் கிடைத்திடும் பல்வேறு தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களில் சேர்ந்து பயன்பெறுமாறு மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories: