வலங்கைமான், பிப். 27: வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலம் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற பத்து ஆடுகளை சொகுசு காரில் கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலம் ஊராட்சி பகுதியில் வழக்கம்போல் நேற்று ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றுள்ளன. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிவன் கோயில் அருகே நேற்று காலை 11 மணியளவில் மரத்தில் நிழலுக்காக ஆடுகள் கூட்டமாக நின்றுள்ளது.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சொகுசு காரில் வந்து அங்கு நின்ற பத்து ஆடுகளை காரில் ஏற்றி கண்ணிமைக்கும் நேரத்தில் பாபநாசம் சாலை பக்கம் சென்றதாக கூறப்படுகிறது. அதனை அடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் இருசக்கர வாகனத்தில் சென்று தேடிய போது ஆடு கடத்திச் சென்ற காரை கண்டுபிடிக்க முடியவில்லை. பட்டப்பகலில் மேச்சலுக்கு சென்று பத்துக்கு மேற்பட்ட ஆடுகளை சொகுசு காரில் கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
