அரூர், பிப்.27: தர்மபுரி வனக்கோட்டம், மொரப்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதி மற்றும் வனச்சாலைகளில் ரோந்து பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மொரப்பூர் வனச்சரக அலுவலர் அருண் பிரசாத் தலைமையில், மொரப்பூர் பிரிவு வனவர் விவேகானந்தன், அரூர் பீட் வனக்காப்பாளர் சதிஸ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் மொரப்பூர் – அனுமந்தீர்த்தம் செல்லும் சாலையிலும், அரூர் டவுன் பகுதியிலும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது உரிய வனத்துறை அனுமதி படிவம் இல்லாமல் துறிஞ்சி, வெப்பாலை உள்ளிட்ட பல இன மரங்களை ஏற்றி, ஊத்தங்கரையில் இருந்து சேலம் சென்ற 2 லாரிகளின் மீது வழக்குபதிவு செய்து, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் முன் ஆஜர்படுத்தினர். அவர் வாகனத்திற்கு தலா ரூ.7500 வீதம் ரூ.15 ஆயிரம் இணக்க கட்டணம் விதித்தார். மேலும், தடிமரங்கள் போக்குவரத்து விதிகள் 1968ன் கீழ், வனத்துறை மூலம் உரிய அனுமதி சீட்டு பெறாமல் தடிமரங்களை ஏற்றிவரும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
