×

நீதித்துறை ஊழல் இடம்பெற்ற விவகாரம் என்சிஇஆர்டி 8ம் வகுப்பு பாடப்புத்தகத்திற்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு; ஒன்றிய அரசு மன்னிப்பு கேட்டது

புதுடெல்லி: நீதித்துறை ஊழல் இடம் பெற்ற என்சிஇஆர்டி 8ம் வகுப்பு பாடப்புத்தகத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு மன்னிப்பு கேட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான பாடத் திட்டங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனமான என்.சி.இ.ஆர்.டி தயாரித்து வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 2005ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்களில் அவ்வப்போது சில மாற்றங்களும், இணைப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் பின்னர் 2020ல் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் மாற்றங்களை பாடத்திட்டங்களில் என்.சி.இ.ஆர்.டி செய்யத் தொடங்கியுள்ளது. அதன்படி, 8ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன “நம் சமூகத்தில் நீதித்துறையின் பங்கு” என்ற பாடத்தில் சில தலைப்புகளை புதிதாக என்.சி.இ.ஆர்.டி இணைத்துள்ளது. அதில், நீதித்துறை கட்டமைப்பைத் தாண்டி, நீதித்துறை ஊழல் மற்றும் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் பற்றிய தகவல்கள் சேர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் நேரடி தலையீடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது என்று தெரிவித்து இருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் தொடர்ந்த வழக்கானது தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்‌ஷி மற்றும் வி.எம்.பஞ்சோலி ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘என்.சி.இ.ஆர்.டி பாட புத்தக விவகாரத்தில் நாங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பை கூறுகிறோம். இந்த பாடம் முழுமையாக திருத்தப்பட்டு மறுபடியும் புதிதாக புத்தகம் பிரசுரிக்கப்படும் என்பதை உறுதி அளிக்கிறேன் இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் தற்போது அந்த பணிகளை தொடர மாட்டார்கள் என்பதை இங்கு உறுதியாக தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

குறிப்பாக 32 புத்தகங்கள் சந்தையில் புழக்கத்தில் வந்தன. ஆனால் அவை அனைத்தும் மீண்டும் திரும்ப பெறப்பட்டுள்ளது.அந்த பாடத்திட்டம் முழுமையாக மாற்றப்படும். அதேப்போன்று நீதித்துறை தொடர்பான ஆட்சேபனைக்குரிய அந்த பாடம் பொதுத் தளத்தில் இருந்தும், இணையத்தில் இருந்தும் முழுவதுமாக அகற்றப்படும் என உறுதி அளிக்கிறோம்’ என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த்,’ இந்த விவகாரம் மிகவும் கண்டனத்துக்குரியது. நீதித்துறை குறித்த இவ்வாறான ஒரு தவறான விஷயம் தற்போது மிகுந்த ஒரு தாக்கத்தை நீதித்துறையில் ஏற்படுத்தி இருக்கிறது. நீங்கள் சுட்ட தோட்டாவால் நீதித்துறையில் ரத்தம் பீறிட்டு வெளியேறி உள்ளது.

இந்த விவகாரத்தை பொருத்தவரைக்கும் மிகவும் மதிப்பிற்குரிய பத்திரிக்கைகள் கூட செய்தியாக்கி இருக்கின்றன. மாணவர்களுக்கு முதலில் பாடப் புத்தகம் மூலம் ஒழுக்கத்தை கற்றுக் கொடுங்கள். வன்முறையை கற்பிக்க வேண்டாம் என்று தான் உச்ச நீதிமன்றத்தின் வலியுறுத்தலாக உள்ளது. குறிப்பாக அந்தப் பாடம் தொடர்பாக அனைத்து விவகாரமும் பொது தளத்தில் இணையத்திலும் உள்ளது. அதனை முழுவதுமாக அகற்றுவதற்கு ஒன்றிய அரசு உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்றார். அப்போது குறுக்கிட்ட புத்தகத்தின் எதிர்ப்பு தெரிவிக்கும் மனுதாரர்களில் ஒருவரான வழக்கறிஞர் விகாஸ் சிங் கூறியதில், ‘‘தற்போது கூட ஒரு பேட்டியில் என்.சி.இ.ஆர்.டி முன்னாள் இயக்குனர் நீதித்துறை தொடர்பான அந்த பாடத்தை நியாயப்படுத்தி கூறியிருந்தார். எனவே இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் அரசியலமைப்பு ஒழுக்கத்தையும், அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டையும் நிலை நிறுத்துவதில் நீதித்துறை மேற்கொள்ளும் தலையாய பங்கை அந்த என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகத்தில் இருந்த பாடம் ஒப்புக்கொள்ளத் தவறிவிட்டது. நீதிக்கான அணுகலை ஒழுங்குபடுத்துவதையும், சட்ட உதவி நடைமுறைகளை மாற்றியமைப்பதிலும், நீதிமன்றத்தின் முயற்சி மற்றும் நடவடிக்கைகளை குறித்து அந்த பாடத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. புத்தகத்தில் உள்ள வார்த்தைகளின் தேர்வு, வெளிப்பாடுகள் வெறுமனே கவனக்குறைவான பிழையானது கிடையாது. எந்தவொரு சட்டபூர்வமான விமர்சகரையும் நசுக்கும் நடவடிக்கை அல்லது முன்மொழிவை எடுக்கவில்லை.

ஏனெனில், கருத்து மாறுபாடு, விமர்சனங்கள் ஒரு ஜனநாயகத்தின் உயிர்ச்சக்தி மற்றும் நிறுவன பொறுப்புக்கூறலுக்கான அத்தியாவசிய கருவியாகச் செயல்படுகின்றன என்பதில் உச்ச நீதிமன்றம் உறுதியாக இருக்கிறது. ஆனால் பள்ளி பருவத்தில் இருக்கும் மாணவர்கள் பொது வாழ்க்கையின் நுணுக்கங்களை கற்க தொடங்கும் போது அவர்களுக்கு ஒரு தவறான வழிகாட்டுதல்களை நாமே காட்டி விடக்கூடாது என்பதை மிகவும் கருத்தில் கொண்டு உள்ளோம்.
மேலும் இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள தவறான கருத்துக்கள் வெறும் மாணவர்களோடு நின்று விடாது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அடுத்த தலைமுறைகளுக்கு கூட எடுத்துச் செல்லப்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே இந்த பாட புத்தகத்தை விநியோகிப்பதை என்.சி.இ.ஆர்.டி அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரையில் தடை விதித்து நிறுத்தி வைக்க வேண்டும். குறிப்பிட்ட அந்த பாடம் மறுபடி ஆய்வு செய்யப்பட்டு திருத்தி பிரசுரிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் ஒன்றிய கல்வித்துறை சார்பில் ஒரு மன்னிப்பு கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதில் அவர்கள் ஆத்மார்த்தமாக மன்னிப்பு கேட்டார்களா என்றால் அது கேள்விக்குறியாக தான் உள்ளது. எனவே பாட திட்டம் தொடர்பாக ஒன்றிய கல்வித்துறை அமைச்சகத்தின் செயலாளருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கிறோம்.

அதேப்போன்று இவ்வாறு பாட திட்டத்தை புத்தகத்தில் வைக்கப்பட்டதால் என்.சி.இ.ஆர்.டி இயக்குனர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது எங்களின் முக்கிய கேள்வியாக இருக்கிறது. மேலும் இந்த பாடதிட்டத்தை அறிமுகப்படுத்தியதற்கு பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை அல்லது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது? என்பதற்கான காரணத்தை ஒன்றிய அரசு தெரிவிக்க வேண்டும். நீதித்துறை தொடர்பான அவதூறு அந்த பாடத்துடன் பிரசுரிக்கப்பட்ட விநியோகிக்கப்பட்ட அனைத்து புத்தகங்களும் திரும்பப் பெறப்பட வேண்டும். பொது தளங்களில் இருந்தும், புத்தகக் கடைகளில் இருந்தும் குறிப்பிட்ட புத்தகம் திரும்பப்பெற வேண்டும். பொதுதளத்தில் இருக்கக்கூடிய சர்ச்சைக்குரிய அந்தப் பாடத்தை யாரும் சென்று பார்க்க முடியாதபடி அதனை நீக்க வேண்டும் அல்லது தடை செய்ய வேண்டும்.

அனைத்து புத்தகங்கள் மற்றும் டிஜிட்டல் நகல்களையும் கைப்பற்ற வேண்டும். பாடப்பகுதி தயாரிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட ஆலோசனை கூட்ட விபரங்கள் குறித்த ஒரு சிறு அறிக்கையின் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். பாடப்புத்தகத்தை தயாரித்தவர்கள் குறித்த விபரங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் சர்ச்சைக்குறிய எட்டாம் வகுப்பு பாடப்பகுதியை தயாரித்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

* யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை
தலைமை நீதிபதி சூர்யாகாந்த் கூறுகையில்,’ என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் என்று குறிப்பிட்ட விவகாரத்தில், இதற்குப் பின்னால் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக தப்பிக்க முடியாது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : Supreme Court ,Union government ,New Delhi ,National Institute of Educational Research ,CBSE ,
× RELATED நீதிபதி யஷ்வந்த் மீதான விசாரணைக்குழு...