பெங்களூரு: பண தகராறில் கன்னட சினிமா இயக்குநரை கடத்தி தாக்கி, நகைகள், பணம் பறிக்கப்பட்ட வழக்கில் சின்னத்திரை நடிகை உள்ளபட 11 பேர் கைது செய்யப்பட்டனர். ‘‘ஜீவனத பாஷே” என்ற கன்னட சினிமாவை இயக்கியவர், டிஏ அனிஷ். இந்த சினிமா இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், படத்திற்கு முதலீடு செய்த நபர்கள் மற்றும் அனிஷ் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக 2 மாதம் முன்பு அனிஷ் மும்பைக்கு சென்று விட்டார். இதற்கிடையே பெங்களூரு இந்திராநகரில் வசித்த சின்னத்திரை நடிகை ஐஸ்வர்யாவிடம் காரை விற்பனை செய்து பணத்தை அனுப்பு என அனிஷ் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா , காரை விற்பனை செய்வதற்கு உதவி செய்வதாக கூறியதால் அதை நம்பிய அனிஷ் கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவுக்கு வந்துள்ளார்.
பெங்களூரு ஆடுகோடியிலுள்ள ஒரு இடத்தை கூறி அங்கே வரவேண்டும் என்று நடிகை ஐஸ்வர்யா தயாரிப்பாளர் அனிசுக்கு தகவல் அனுப்பினார். அதன்படி அனிஷ் அந்த இடத்திற்கு வந்த போது ஐஸ்வர்யா மற்றும் சிலர் அவரை பையப்பனஹள்ளி போலீஸ் சரகத்திலுள்ள ஒரு இடத்திற்கு அழைத்து சென்று அங்கே அடைத்து வைத்தனர். அதன் பிறகு ஐஸ்வர்யாவின் கூட்டாளிகள் அனிசை அடித்து உதைத்தனர். பின்னர் அனிஷ் அணிந்து இருந்த தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் பறித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் , சின்னத்திரை நடிகை ஐஸ்வர்யா மற்றும் அவரின் கூட்டாளிகள் 11 பேரை கைது செய்தனர்.
