×

என்சிஇஆர்டி பாட புத்தக சர்ச்சை நீதித்துறை ஊழல் பாடத்தை சேர்த்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: ஒன்றிய கல்வி அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: என்சிஇஆர்டி பாட புத்தகத்தில் சர்ச்சைக்குரிய நீதித்துறை ஊழல் பாடத்தை சேர்த்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் தெரிவித்தார். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) 8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் ‘நீதித் துறையில் ஊழல்’ என்ற தலைப்பிலான பாடப் பிரிவு இடம் பெற்றிருந்ததது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வேதனை தெரிவித்தார். ஜாம்ஷெட்பூரில் தர்மேந்திர பிரதான் இது பற்றி நேற்று கூறுகையில்,’8ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நீதித்துறை ஊழல் குறித்த அத்தியாயம் இடம் பெற்றது வேதனை அளிக்கிறது. அதே நேரத்தில் இதற்கான பொறுப்புணர்வை சரி செய்து புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பாடத்தை சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதித்துறையை அவமதிக்கும் நோக்கம் எதுவும் இல்லை. அதைப் பற்றி தெரிந்தவுடன், பாடப்புத்தகங்களின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது. நீதித்துறை மீது எங்களுக்கு முழு மரியாதை உண்டு, மேலும் இந்த பிரச்னையை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். நீதிமன்றத்தின் உத்தரவுகள் கடுமையாக பின்பற்றப்படும்’’ என்றார்.

* நீதித்துறைக்கு தலைவணங்குகிறோம்
பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று பேட்டியளிக்கும் போது கூறுகையில்,’என்சிஇஆர்டி பிரச்னையைப் பொறுத்தவரை, இது ஒரு உணர்வுபூர்வமான விஷயம். இந்தியாவில் மட்டுமல்ல, இந்த முழு உலகிலும், இந்திய நீதித்துறையைப் போலவே சுதந்திரமான மற்றும் தகுதியான வேறு எந்த நிறுவனமும் இல்லை.

இந்திய நீதித்துறை மீது நாம் அனைவரும் மிகுந்த மரியாதையையும் பெருமையையும் கொண்டுள்ளோம். இதுவே அனைவரின் இதயத்திலும் உள்ள உணர்வு. நாங்கள் நீதித்துறைக்கு தலை வணங்கிறோம். இந்திய நீதித்துறை செயல்படும் பாரபட்சமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, நாம் எப்போதும் நாட்டின் நீதித்துறையை மதித்து நிற்க வேண்டும்’ என்றார்.

* பிரதமர் மோடி அதிருப்தி
நீதித்துறை ஊழல் பாடத்தால் பிரதமர் மோடி அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் சுற்றுப்பயணத்தில் உள்ள பிரதமர் மோடி, இந்த தவறு சரிசெய்யப்பட வேண்டும் என்று கூறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மோசடியை விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களில் நீதித்துறை பற்றிய விமர்சனக் குறிப்புகள் குறித்து உச்ச நீதிமன்றம் சரியாகவே கோபமடைந்துள்ளது என்று காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் கூறினார். எக்ஸ் தளத்தில் அவர் பதிவிடுகையில்,’ என்சிஆர்டி பாடப்புத்தகங்களில் நீதித்துறை பற்றிய விமர்சனக் குறிப்புகள் இடம் பெற்றதற்கு உச்ச நீதிமன்றம் சரியாகவே கோபமடைந்துள்ளது.

கடந்த பத்தாண்டுகளாக இதுபோன்ற புத்தகங்களை மீண்டும் எழுதுவது குறும்பு மற்றும் தீமை நிறைந்த ஆர்எஸ்எஸ்சால் இயக்கப்படும் ஒரு பயிற்சியாகும். கடந்த பத்தாண்டுகளில் என்சிஆர்டி பாட புத்தகங்கள் மாற்றியமைக்கப்பட்ட விதம் அவமானகரமானது. இது ஆபத்தானது மட்டுமில்லாமல் ஆர்எஸ்எஸ்சால் இயக்கப்படும் குறும்புத்தனமும் தீமையும் நிறைந்த செயலாகும். இந்த மோசடியை விசாரிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : NCERT ,Union Education Minister ,New Delhi ,Dharmendra Pradhan ,National Council of Educational Research and Training ,
× RELATED நீதித்துறை ஊழல் இடம்பெற்ற விவகாரம்...