சென்னை: கலை பண்பாட்டுத்துறை வெளியிட்ட அறிக்கை:சென்னை நகர் இசை நகரமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில், கலை பண்பாட்டுத்துறையின் வாயிலாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரினா கடற்கரை, வள்ளுவர் கோட்டம் ஆகிய இடங்களில் நாளை மற்றும் 1ம் தேதி ஆகிய நாட்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முன்னணி இசைக் கலைஞர்களைக் கொண்டு இசை நிகழ்ச்சிகள், தமிழிசை நிகழ்ச்சிகள் கலை பண்பாட்டுத்துறையால் நடத்தப்பட உள்ளது. சென்னை மெரினா விவேகானந்தர் இல்லம் எதிர்புறம் அமைந்துள்ள கடற்கரை உள்சாலை மணற்பரப்பில் உள்ள திறந்தவெளி அரங்கில் நாளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மாலை 6 மணிக்கு இசை நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து திரைப்பட பாடகர் சித்ஸ்ரீராம் குழுவினரின் தமிழிசையும், பாலசாய், புண்யா ஸ்ரீநிவாஸ் ராகவேந்தர் ராவ் குழுவினரின் கருவியிசையும், வள்ளுவர் கோட்டத்தில் லிடியன் நாதஸ்வரம்-அமிர்தவர்ஷினியின் குறளிசை காவியம் என்ற இசை நிகழ்ச்சியும், கியூஎப்ஆர் குழுவினரின் தமிழிசையும், திரையிசையும் என்ற நிகழ்ச்சியும், வரும் 1ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் பத்மஸ்ரீ முருகையன் குழுவினரின் கருவியிசை, சங்கரின் சாதக பறவைகள் குழுவினரின் மெல்லிசை, வள்ளுவர் கோட்டத்தில் பணகுடி சிவா குழுவினரின் நையாண்டி மேளம், இசைக்கலைஞர் மஹதியின் தமிழிசை, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் தமிழ் ஓசை பழந்தமிழ் இலக்கிய பாடல்கள் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சி இசை ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் கட்டணமில்லாமல் கண்டுகளிக்க ஏதுவாக கலை பண்பாட்டுத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
