சென்னை: இந்தாண்டிற்கான கோடைகால வருகையை குறிக்கும் வகையில் ஒரேநாளில் தமிழகத்தின் மின்நுகர்வு 400 மில்லியன் யூனிட்டை எட்டியதாக மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை கடந்த ஜன.19ம் தேதியுடன் முடிந்தநிலையில், தொடர்ந்து பனிப்பொழிவு காரணமாக மின் நுகர்வு தினமும் சராசரியாக 350 மில்லியன் யூனிட்களாக இருந்தன. இந்த மாதத்தின் தொடக்கத்திலும் அதே நிலை நீடித்து வந்தன. இந்த நிலையில் சில தினங்களாக தமிழகம் முழுவதும் வெயில் காரணமாக இரவு நேரங்களில் அதிகப்படி வெப்பநிலை நிலவுகின்றன. இதனால், வீடுகள், அலுவலகங்கள் போன்றவற்றில் குளிர்சாதன பயன்பாடு அதிகரித்துள்ளது. அந்தவகையில் இந்த ஆண்டு முதல் முறையாக 400 மில்லியன் யூனிட்டுகளை கடந்த செவ்வாய்க்கிழமை தாண்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது கோடைகால வருகையின் மாற்றத்தைக் குறிப்பதாகவும் கூறுகின்றனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2025ம் ஆண்டில், பிப்ரவரி 24ம் தேதி மாநிலத்தின் தினசரி நுகர்வு 373.72 மில்லியன் யூனிட்டுகளாகவும், உச்சபட்சத் தேவை 18,318 மெகாவாட்டாகவும் இருந்தது. சென்னையின் மின் தேவை மெதுவாக அதிகரிக்கத் தொடங்கியது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு நாளில் அதிகபட்சமாக 454.32 மில்லியன் யூனிட் மின் நுகர்வு ஏப்ரல் 30, 2024 அன்று பதிவானது. அதே நேரத்தில் அதிகபட்ச மின் நுகர்வு மே 1, 2024 அன்று 20,830 மெகாவாட் ஆகும். கடந்த ஆண்டு, கோடை மழை காரணமாக மின் தேவை மற்றும் நுகர்வு எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாக இருந்தது. இந்த நிலையில் தான் இந்தாண்டில் முதல் முறையாக பிப்ரவரி மாதம் மின்நுகர்வு 40.58 கோடி (405.9 மில்லியன் யூனிட்) அதிகரித்துள்ளது. இவை வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 500 மில்லியன் யூனிட் வரை தாண்டும் என எதிர்ப்பார்க்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.
