எப்ஐஎச் புரோ லீக் ஹாக்கி திக்… திக்.. திரில்லரில் திணறடித்த ஸ்பெயின்: பெனால்டி ஷூட்அவுட்டில் இந்தியா தோல்வி

ஹோபர்ட்: எப்ஐஎச் புரோ லீக் ஆடவர் ஹாக்கி போட்டியில் நேற்று, ஸ்பெயின் அணி, பெனால்டி ஷூட்அவுட்டில் இந்தியாவை வெற்றி கண்டது. எப்ஐஎச் புரோ லீக் ஆடவர் ஹாக்கி போட்டிகள் ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த முதல் போட்டியில், இந்தியா – ஸ்பெயின் அணிகள் மோதின. போட்டியின் துவக்கம் முதல் இந்திய அணி வீரர்கள் அட்டகாசமாக ஆடி பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

போட்டியின் 19வது நிமிடத்தில் இந்திய அணி கேப்டன் ஹர்திக் சிங் சிறப்பாக செயல்பட்டு பந்தை கடத்திச் சென்று, மணிந்தரிடம் தள்ளி விட, அவர் அந்த பந்தை லாவகமாக கோல் போஸ்டுக்குள் தள்ளி கோலாக்கினார். அதன் பின் இரு அணி வீரர்களும் கோல் போட முனைப்பு காட்டியபோதும் கோல் விழவில்லை. அதைத் தொடர்ந்து 2வது பாதியின் கடைசி கட்டத்தில் ஸ்பெயின் வீரர்கள் கோல் போடுவதில் முனைப்பு காட்டினர்.

அவர்களை தடுக்க இந்திய வீரர்கள் போராட வேண்டியிருந்தது. போட்டி முடிய இன்னும் 2 நிமிடங்களே இருந்த நிலையில், ஸ்பெயின் வீரர் புருனோ ஃபான்ட் அட்டகாசமாக ஆடி தனது அணிக்காக முதல் கோல் போட்டு அசத்தினார். அதனால், 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமன் ஆனது. அதையடுத்து பெனால்டி ஷூட்அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதில் இந்தியா 3 கோல்களும், ஸ்பெயின் 4 கோல்களும் போட்டன. அதனால், 4-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி வாகை சூடியது.

Related Stories: