சேப்பாக்கத்தில் கிரிக்கெட் திருவிழா; ஜிம்பாப்வேயுடன் நாளை இந்தியா பலப்பரீட்சை: வாழ்வா, சாவா போட்டியால் திக்..திக்…

சென்னை: ஐசிசி டி.20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜிம்பாப்வே அணியுடன் மோகிறது. லீக் சுற்றில் 3 போட்டியிலும் வென்ற இந்தியா சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் தென்ஆப்ரிக்காவிடம் 76ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் ரன்ரேட் மைனஸ் 3.800 என்ற நெருக்கடியில் இருக்கிறது. நாளை ஜிம்பாப்வே, வரும் 1ம் தேதி வெஸ்ட்இண்டீஸ் அணிகளை வீழ்த்தினாலும், மற்ற அணிகளின் முடிவை பொறுத்தே அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது. அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டுமெனில் 2 போட்டியில் கட்டாய வெற்றி தேவை.

பேட்டிங்கில் அபிஷேக் சர்மா 3 போட்டியில் டக்அவுட் ஆன நிலையில் தெ.ஆப்ரிக்காவுடன் 15 ரன்னே அடித்தார். கேப்டன் சூர்யகுமார் 180, இஷான் கிஷன் 176, ஷிவம் துபே 158 ரன் அடித்துள்ளனர். திலக்வர்மா, ஹர்திக் பாண்டியா பெரிதாக சாதிக்கவில்லை. பவுலிங்கில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், சுழலில் வருண் சக்ரவர்த்தி இடத்தை தக்க வைத்துக்கொள்வர். கடந்த போட்டியில் அக்சர்பட்டேலுக்கு வாய்ப்பு அளிக்காதது தான் தோல்விக்கு காரணம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் நாளை வாஷிங்டன் சுந்தருக்குபதிலாக அவர் களம் இறங்குகிறார்.

மறுபுறம் ஜிம்பாப்வே லீக் சுற்றில் பி பிரிவில் வலுவான ஆஸ்திரேலியா, இலங்கையை வீழ்த்தி முதலிடத்தை பிடித்து கம்பீரமாக சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்த நிலையில், முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீசிடம் 107 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததால் நாளை கட்டயாம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது. பேட்டிங்கில் பிரையன் பென்னட் 180 ரன், அடித்து முதுகெலும்பாக உள்ளார். கேப்டன் சிக்கந்தர் ரசா,மருமணி, ரியான் பர்ல் ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்ப்பர். பவுலிங்கில் முசரபானி 4 போட்டியில் 11 விக்கெட் எடுத்து 2வது இடத்தில் உள்ளனர். பிராட் எவன்ஸ்,ரிச்சர்ட் ங்கராவா, சுழலில் கிரேம் க்ரீமர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கலாம். நாளை யார் தோற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால் வாழ்வா,சாவா நிலையில் களம் இறங்குகிறது. இந்திய வீரர்கள் நேற்று மாலை சேப்பாக்கத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இன்றும் பயிற்சி மேற்கொள்கின்றனர். ஜிம்பாப்வே வீரர்கள் நேற்று சென்னை வந்த நிலையில் இன்று அவர்களும் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு எப்படி?
தென்ஆப்ரிக்காவிடம் இந்தியா படுதோல்வி அடைந்ததால் அரையிறுதி வாய்ப்பு சிக்கலாகி இருக்கிறது. எஞ்சிய 2 போட்டியிலும் நல்ல ரன்ரேட்டில் வென்றாக வேண்டும். முன்னதாக நாளை மாலை 3 மணிக்கு தென்ஆப்ரிக்கா-வெஸ்ட்இண்டீஸ் அகமதாபாத்தில் மோதுகிறது. இதில் தென்ஆப்ரிக்கா வெற்றிபெற்று கடைசி போட்டியில் மார்ச் 1ம்தேதி ஜிம்பாப்வேயும் வீழ்த்த வேண்டும். இந்தியா நாளை மற்றும் கடைசிபோட்டியில் மார்ச் 1ல் கொல்கத்தாவில் வெ.இண்டீசை வீழ்த்தவேண்டும். இவ்வாறுநடந்தால் தென்ஆப்ரிக்கா, இந்தியா அரையிறுதிக்கு தகுதிபெறும்.

இல்லையெனில் நாளை வெஸ்ட்இண்டீசும், கடைசி போட்டியில் ஜிம்பாப்வேயும் வென்றால் இந்தியா, வெஸ்ட்இண்டீஸ் அரையிறுதிக்குள் நுழையலாம். தெ.ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே தலா ஒரு வெற்றியுடன் நடையை கட்டவேண்டும். நாளை, வெஸ்ட்இண்டீசும், ஜிம்பாப்வேக்கு எதிராக தென்ஆப்ரிக்காவும் வென்றால் இந்தியா, வெஸ்ட்இண்டீஸ், தெ.ஆப்ரிக்கா தலா 4 புள்ளிகளை பெறும். இதில் ரன்ரேட் அடிப்படையில் 2 அணிகள் அரையிறுதிக்கு செல்லலாம். இதனால் ரன்ரேட்டை பிளஸ்சாக மாற்ற இந்தியாவுக்கு நாளை 100 ரன் வித்தியாசத்திற்கு மேல் பிரமாண்ட வெற்றி தேவை!

சொந்த ஊர் திரும்பிய ரிங்கு; சாம்சனுக்கு வாய்ப்பு?
இந்திய அணியின் அதிரடி வீரர் ரிங்கு சிங்கின் தந்தை உடல்நலக்குறைவால் நொய்டாவில் உள்ளஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். கவலைக்கிடமான நிலையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ரிங்கு சிங் சொந்தஊர் சென்றுள்ளார். அவர் எப்போது அணியுடன் இணைவார் என தெரியவில்லை. இதனால் நாளை அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் களம் இறங்குவார் என தெரிகிறது. நேற்று சஞ்சு தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.

அனிருத் இசை நிகழ்ச்சி;
சேப்பாக்கத்தில் இந்த உலக கோப்பையில் நாளை கடைசி போட்டி நடக்கிறது. இந்தியா முக்கியமான போட்டியில் ஜிம்பாப்வேயுடன் மோத உள்ளது. இதனால் ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது. இந்தபோட்டிக்கு முன் மாலை 6 மணிக்கு அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பாடல்களை பாடி அவர் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார். உலக கோப்பைக்கான பீல் த திரில் என்ற தீம்பாடலுக்கும் அவர்தான் இசையமைத்து பாடி இருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்…
* இரு அணிகளும் இதற்கு முன் 13 முறை டி.20 போட்டியில் மோதி உள்ளன. இதில் 10ல் இந்தியா, 3ல் ஜிம்பாப்வே வென்றுள்ளது. கடைசியாக மோதிய 5 போட்டியில் 4-1 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
* ஜிம்பாப்வேக்கு எதிராக 2024ல் ஹராரேவில் இந்தியா 234/2 ரன் எடுத்தது தான் சிறந்தஸ்கோர். 2016ல் அதேஹராரேவில் 170/6 எடுத்தது தான் இந்தியாவுக்கு எதிராக ஜிம்பாப்வேயின் பெஸ்ட் ஸ்கோர்.
* டி.20 உலக கோப்பையில் இரு அணிகளும் இதற்குமுன் ஒருமுறை மட்டுமே மோதி உள்ளன. 2022ல் மெல்போர்னில் நடந்த அந்த போட்டியில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி 71 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சேப்பாக்கத்தில் இதுவரை….
* சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்தியா இதற்கு முன் 3 டி.20போட்டிகளில் ஆடி உள்ளது. இதில் இங்கிலாந்து (2025), வெஸ்ட்இண்டீசுக்கு (2018) எதிராக வெற்றி, நியூசிலாந்துக்கு எதிராக (2012) ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
* இங்கு இதுவரை 9 சர்வதேச டி.20 போட்டிகள் நடந்துள்ளன. இதில் 5 முறை சேசிங் செய்த அணியும், 4ல் முதலில் பேட் செய்த அணியும் வென்றுள்ளன.
* நடப்பு உலக கோப்பையில் கனடாவுக்கு எதிராக கடந்த 19ம் தேதி ஆப்கன் 200/4 ரன் எடுத்ததுதான் அதிகபட்சமாகும். வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக 182/4 ரன் எடுத்ததுதான் இந்தியாவுக்கு பெஸ்ட் ஸ்கோர்.
* நடப்பு உலக கோப்பையில் இங்கு இதுவரை 6 போட்டி நடந்துள்ளது. இதில் முதலில் பேட் செய்த அணி 3, சேசிங் அணி 3ல் வென்றுள்ளன.

Related Stories: