ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் இனி கேரளா அல்ல, கேரளம்: மாநிலத்தின் பெயர் மாறுகிறது

புதுடெல்லி: கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான அம்மாநில அரசின் முன்மொழிவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கேரள மாநிலத்தின் பெயரை மலையாள மொழி அடிப்படையில் கேரளம் என மாற்ற அம்மாநில சட்டப்பேரவையில் கடந்த 2024 ஜூன் 24ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக அரசியலமைப்பின் முதல் அட்டவணையை திருத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேரள அரசு ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டது. இதுதொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம், சட்டம், நீதித்துறை உள்ளிட்ட அமைச்சகங்களின் கருத்துக்களை கேட்டது. அந்த அமைச்சகங்கள் பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து, புதிய பிரதமர் அலுவலகமான சேவா தீர்த்தத்தில் நேற்று நடந்த முதல் ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் கேரளம் பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த முடிவு எடுப்பட்டதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். அரசியலமைப்பின் பிரிவு 3, தற்போதுள்ள மாநிலங்களின் பெயர்களை மாற்றுவதற்கு வழிவகை செய்கிறது. ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் பிரிவு 3ன் கீழ் தனது கருத்துக்களை தெரிவிக்க கேரள (பெயர் மாற்றம்) மசோதா 2026 என்ற மசோதாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு கேரள சட்டப்பேரவைக்கு பரிந்துரைப்பார்.

கேரள சட்டப்பேரவையின் கருத்துக்களைப் பெற்ற பிறகு கேரள பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த ஜனாதிபதி அனுமதி அளிப்பார். அதைத் தொடர்ந்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்படும். கேரளாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அம்மாநிலத்தின் நீண்ட நாள் கோரிக்கையான பெயர் மாற்றத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. கேரளம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டால் கேரள மக்களை அழைக்க கேரளத்தவர், கேரளக்காரர்கள் என்ற பேச்சுவழக்குகள் என்னவாகும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் நகைச்சுவையாக கேள்வி எழுப்பி உள்ளார்.

சேவா உறுதிமொழி: பிரதமரின் புதிய அலுவலகமான சேவா தீர்த்தத்தில் நடக்கும் முதல் அமைச்சரவை கூட்டம் என்பதால் இதில் நேற்று சேவா உறுதி தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன்படி, இந்த புதிய கட்டிடத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் 140 கோடி இந்திய மக்களுக்கும் சேவை செய்யும் மனப்பான்மையால் ஈர்க்கப்பட்டிருக்கும், தேசத்தைக் கட்டியெழுப்பும் பரந்த குறிக்கோளுடன் இணைக்கப்படும் என்று அமைச்சரவை உறுதிமொழி எடுத்தது.

குஜராத் மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல்
ஒன்றிய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட பிற முடிவுகள்:
* 2026-27ம் பருவத்தில் சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) குவிண்டாலுக்கு ரூ.275 அதிகரித்து ரூ.5,925 ஆக நிர்ணயிக்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
* மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 4 மாநிலங்களில் 8 மாவட்டங்களை உள்ளடக்கிய ரூ.9,072 கோடி மதிப்பிலான 3 ரயில்வே திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன்படி, கோண்டியா-ஜபல்பூர் ரயில் வழித்தடத்தை இரட்டை வழிப்பாதையும், புனாராக்-கியூல் மற்றும் காம்ஹரியா-சன்தில் இடையே 3வது மற்றும் 4வது ரயில் வழித்தடமும் அமைக்கப்படும்.
* பொதுத்துறை நிறுவனமான பவர்கிரிட்டின் பங்கு முதலீட்டு வரம்பை ரூ.5,000 கோடியிலிருந்து ரூ.7,500 கோடியாக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
* ஸ்ரீநகர் விமான நிலையத்தில், பாதுகாப்பு படையினருக்கான பயன்பாட்டு பகுதிக்காக ரூ.1,677 கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
* குஜராத்தில் கிப்ட் சிட்டி முதல் ஷாபூர் வரையிலும் 3.33 கிமீ தூரத்திற்கு மெட்ரோ விரிவாக்க திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் திட்ட மதிப்பீடுா ரூ.1,067.35 கோடி.

Related Stories: