பாட்னா: பீகார் சட்டபேரவையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கேள்விகளை எழுப்பி ரகளையில் ஈடுபட்டதால் முதல்வர் நிதிஷ்குமார் திடீரென ஆவேசமடைந்த எதிர்கட்சி எம்எல்ஏக்களை கடுமையாக விமர்சித்தார். பீகார் சட்டபேரவை கூட்டம் நடந்து வருகிறது. நேற்று காலை 11 மணிக்கு அவை கூடியதும் ஆர்ஜேடி எம்எல்ஏ குமார் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்திய கிராம காவலாளிகள் மீது போலீசார் தடியடி நடத்திய விவகாரத்தை எழுப்பினார்.
அவரை தொடர்ந்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களின் உதவியுடன் மிருகத்தனமான ஆட்சி நடைபெறுவதை அனுமதிக்க மாட்டோம் என்று கோஷமிட்டனர். இந்த அமளியால் பொறுமையிழந்த முதல்வர் நிதிஷ்குமார், அவசியமற்ற விஷயங்களை இங்கு பேசாதீர்கள். இந்த அரசு எந்த தடையும் இல்லாமல் இயங்கும். பேரவையில் நாங்கள் 202 பேர் உள்ளோம்.நீங்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள் என சிந்தித்து பாருங்கள் என்றார்.
பேரவையில் தேஜ கூட்டணிக்கு 202 இடங்களும், ஆர்ஜேடி கூட்டணிக்கு 25 இடங்களும் இருப்பதை அவர் மறைமுகமாக சுட்டி காட்டினார். இதை தொடர்ந்து ஆர்ஜேடி எம்எல்ஏ பாய் வீரேந்திரா பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளில் 2 முறை எங்கள் கட்சியுடன் ஜேடியு கூட்டணி வைத்திருந்தது என்பதை சுட்டிகாட்டினார். அதற்கு பதிலளித்த நிதிஷ்குமார், நீங்கள்(ஆர்ஜேடி) பிரச்னையை ஏற்படுத்தியதால் இனி திரும்பவும் ஆர்ஜேடியுடன் கூட்டணி இல்லை என்று முடிவெடுத்து ஆட்சியில் இருந்து விலகினோம் என்றார்.
