சத்ரா: ஜார்க்கண்டில் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதில் நோயாளி, மருத்துவர்கள் உட்பட 7 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் லாதேகர் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் குமார் (61) என்பவர் தனது சாலையோர ஓட்டலில் கடந்த 16ம் தேதி நடந்த தீவிபத்தில் காயமடைந்தார். 60 சதவீத தீக்காயத்துடன் ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சஞ்சய் குமாரை மேல் சிகிச்சைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ரூ.8 லட்சம் செலவாகும் என்பதால், உறவினர்கள் மற்றும் நிதி நிறுவனத்தில் அவரது குடும்பத்தினர் கடன் வாங்கினர். இதனையடுத்து ரெட்பேர்ட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பீச்கிராப்ட் சி90 ரக விமானம் நேற்று முன்தினம் இரவு 7.11 மணிக்கு ராஞ்சியில் இருந்து புறப்பட்டது. சுமார் இரவு 7.34 மணிக்கு அந்த விமானம் ரேடார் கட்டுப்பாட்டில் இருந்து துண்டிக்கப்பட்டது. சத்ரா மாவட்டத்தின் கசியாத்து காட்டுப்பகுதியில் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியது.
இந்த விமான விபத்தில் நோயாளி சஞ்சய் குமார், விமானிகள் விவேக் விகாஸ் பகத், சவ்ராஜ்தீப் சிங், டாக்டர் விகாஸ் குமார் குப்தா, உதவியாளர் சச்சின் குமார் மிஸ்ரா மற்றும் சஞ்சய் குமாரின் மனைவி அர்ச்சனா தேவி, உறவினர் துரு குமார் ஆகிய 7 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்து குறித்து ஒன்றிய அரசின் விமான விபத்து புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சத்ராவில் உள்ள சதார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மோசமான வானிலை காரணமாக விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என்றும் விரிவான விசாரணைக்கு பின் சரியான காரணம் கண்டறியப்படும் என்றும் ராஞ்சி விமான நிலைய இயக்குனர் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.
