எல்லோரும் சமம்தானே டீச்சர்?

நன்றி குங்குமம் தோழி

மனம் பேசும் நூல் 11

வளரிளம் பருவத்தினரைக் கையாள்வது கடலில் துடுப்பு போடுவதற்கு சமம் என்கின்றனர் பெற்றோர். காரணம், அலை எந்த பக்கம் நம்மை இட்டுச் செல்லும் எனப் புரியாமலே தவிப்பதாகத் தெரிவிப்பர். இதன் காரணமாகவே, தங்களின் டீன் ஏஜ் பிள்ளைகளை எந்த மாதிரியாக வளர்ப்பதென, மனநல ஆலோசகர்களிடமும், ஆசிரியர்களிடமும் அடிக்கடி கேட்டு அறிகின்றனர். ஒரு சிலர் கூடுதலாக பேரன்டிங் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பிக்கிறார்கள்.பிள்ளை வளர்ப்பில் இந்தளவு சிக்கல் ஏன் வந்தது என்ற கேள்விக்கு, மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் எழுதியுள்ள “எல்லோரும் சமம்தானே டீச்சர்?” புத்தகம் பல்வேறு கோணங்களில் விழிப்புணர்வை நமக்கு வழங்குகிறது.

இன்றைய டீன் ஏஜ் பருவத்தினர் என்ன சாப்பிட வேண்டும் என்பதில் தொடங்கி, என்ன பேச வேண்டும் என்பது வரை அவர்களின் விருப்பங்களை சமூக வலைத்தளங்களே தீர்மானிக்கின்றன என்கின்றவர், இதனால், மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் நல்ல செய்திகளைவிட பொய்யையும், வெறுப்பையும் சுலபமாய் பரப்ப முடிகிறது என்கிறார்.மனித மூளை துரிதமாக வளர்ச்சியடையும் முதல் பதினைந்து வருடங்கள் முக்கியமானது. குழந்தைப் பருவமும், வளரிளம் பருவமும் ஒருவரின் வளர்ச்சியில் நீண்ட கால தாக்கங்களை ஏற்படுத்துகிற இந்த நேரத்தில்தான், டிஜிட்டல் உலகிற்குள் இளைஞர்களின் பங்கு அதிகமாகியிருக்கிறது. அவர்கள் பார்க்கிற ஊடகங்களின் தாக்கம், அவர்களை சிந்திக்க விடாமலே தடுக்கிறது.

உதாரணத்திற்கு, 240 கிலோ மீட்டர் வேகத்தில் பைக் ஓட்டும் ஒருவரின் சமூக வலைத்தளக் கணக்கை லட்சக்கணக்கில் பின்தொடர்பவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாகவே இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி அளிப்பதாய் இருக்கிறது. சுய தேவைகளை மட்டுமே சிந்திக்கிற, யாருக்காகவும், எதற்காகவும் தன் நலத்தை விட்டுத்தராத, சக மனிதனை புறக்கணிக்கும் மனத்துடன், வளரிளம் பருவத்தினர் வளர்கின்றனர். இதனால் பெற்றோர்களை, ஆசிரியர்களை, முதியவர்களை துளியும் மதிக்காத தலைமுறை ஒன்று நம் கண்முன்னே உருவாகி வருகிறது. இந்த மாற்றங்களை சரி செய்ய, கல்வியை மதிப்பெண் சார்ந்து பார்க்காமல், அறத்தையும், அறிவியலையும், வாழ்க்கை முறைகளையும் கற்றுக் கொடுக்கும் ஆயுதமாய் பார்க்க வேண்டும்.

இன்றைய டிஜிட்டல் உலகம் கற்றுக் கொடுப்பது, தன் அடையாளத்தைத் தேடுவது. அதை நிறுவுவது. வெளிப்படுத்துவது. இரண்டாவது, எதிர்பாலின ஈர்ப்பும், கவனம் பெறுதலும் முக்கியமானதாய் இருக்கிறது. இதில்தான் ஒருசில மாணவர்கள், தங்கள் சாதியை அடையாளமாக மாற்றுகிறார்கள். தங்களுக்குச் சாதகமான அடையாளம் எந்தவித முயற்சியின்றி எளிதாய் கிடைக்கும் போது, தயக்கமின்றி அதனை வெளிப்படுத்த முயற்சிக்கிறார்கள்.தனிநபரிடம் உருவாகியுள்ள இந்த தன்னலப் போக்கு, பெருகிவரும் வெறுப்பு மனநிலைக்கும், வன்முறைச் சம்பவங்களுக்கும், தற்கொலைக்கும், போதைப் பழக்கத்திற்கும் காரணமாகிறது. வளரிளம் பருவத்தினரிடம் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றங்களை அச்சத்துடன் நாம் கவனித்து வருகிறோம்.

இரண்டு மாறுபட்ட தலைமுறைகளிடையே வாழும் தனித்துவம் உள்ள தலைமுறையினராய் நாம் இருக்கிறோம். இரண்டு எதிரெதிரான கலாச்சார மாற்றங்களை பார்த்த சாட்சியாகவும் நாம் இருக்கிறோம். ஒருவரிடம் பேசவேண்டும் என்பதற்காக இரவெல்லாம் விழித்திருந்து, நீண்ட தூரம் பயணித்த தலைமுறையாகவும் நாம் இருந்தோம். இருந்த இடத்திலிருந்தே உலகின் எந்த மூலையில் இருப்பவருடனும் அவர் முகம் பார்த்துப் பேசுகிற சொகுசை அனுபவிப்பவராகவும் இன்று நாம் இருக்கிறோம். இத்தனை வேகமான தலைகீழ் மாற்றங்களை, வேறெந்த காலத்தில் வாழ்ந்தவரும், தங்கள் வாழ்நாளில் அனுபவித்திருக்க வாய்ப்பில்லை.

இன்றைய இளைஞர்களில் ஆண்-பெண் உறவுச் சிக்கல்கள், சமூக ஊடகங்களில் நிகழ்த்தும் உளவியல் வன்முறைகள், பிரேக்கப் பிரச்னைகள் போன்றவை பிரதானமானதாய் இன்று இருக்கிறது. இன்றைய தலைமுறையின் ஆண்-பெண் உறவு என்பதும் வெளிப்படையானதாய், எளிமையாய் மாறி வருகிறது. இந்த டிஜிட்டல் தலைமுறை இளைஞர்களை பொறுத்தவரை, அவர்களுக்குப் பிறகே மற்றவை.

இந்திய மக்கள் தொகையில் 22 சதவிகிதம், வளரிளம் பருவத்தினரே உள்ளனர். இதில் இளவயதில் பாலுறவில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் கூடியிருக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் பாலுறவு என்பதும், வளரிளம் பருவத்தினரிடம் அதிகரித்திருக்கிறது. முதல்முறை பாலுறவு கொள்ளுகிற வயதும் குறைந்திருக்கிறது. பாதுகாப்பற்ற பாலுறவு காரணமாய், பாதுகாப்பற்ற கர்ப்பம் அதிகரித்திருப்பதுடன், பாலியல் நோயால் பாதிப்படைவதும் அதிகரித்திருக்கிறது.

இந்தியாவில் 2 மில்லியன் வளரிளம் பருவ பெண்களுக்கு கருத்தடை சாதனங்கள் தேவையான நேரத்தில் கிடைப்பதில்லை எனவும், வளரிளம் பருவத்தில் நடக்கக்கூடிய கருச்சிதைவிற்குப் பிறகான முறையான மருத்துவப் பராமரிப்பு 78 சதவீதம் கிடைப்பதில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம், வளரிளம் பருவத்தினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான Golobal Acccelerated Action for Health of Adolescents என்ற வழிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. இதை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், நமது இந்தியா வளரிளம் பருவத்தினரின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டிய தேவையிருக்கிறது.

மேலும், 15 வயதிலிருந்து 30 வயதிற்குள் உள்ளவர்களிடையே தற்கொலைகள் அதிகம் நடக்கின்றன என்றும், உலக அளவில் அதிகமான தற்கொலைகள் இந்தியாவில்தான் நடக்கின்றன என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2020ல் மட்டும் கிட்டத்தட்ட 11 ஆயிரம் குழந்தைகள் தற்கொலை செய்ததாக தெரிய வருகிறது. இது முந்தைய ஆண்டை விட 20 சதவீதம் கூடுதல் எனவும் தெரிகிறது. எமில் டர்க்லின் என்ற தத்துவவியலாளர் தற்கொலைகளை ‘சமூகத்தின் நோய்’ என்கிறார். தற்கொலைகளை நாம் சமூக அவலமாகவே கருதுவதில்லை. இதனை தனிநபரின் மனநல பிரச்னையாக மாற்றவே முயற்சிக்கிறோம். சிதைந்த மனமும், சூழ்ந்து கொள்ளும் அவநம்பிக்கையுமே, தற்கொலையின் இறுதிப்படியாக இருக்கிறது. அதுவே முதல் காரணம் என்று சொல்வதும் சுயநலமானது.

தீவிர மனநோய் என்பது அன்றாட வாழ்க்கையின் நெருக்கடிகளினால் உருவாகும் மனநலம் இன்மையே. சிறிய மனநலப் பிரச்னைகளும் பெரிய பாதிப்புகளை இன்று உருவாக்குகின்றன. தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களும், இளைஞர்களும் மனநோயாளிகள் அல்ல. சூழ்நிலை ஏற்படுத்திய பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள். அதிகரிக்கும் வன்முறை சம்பவங்களுக்கும், வெறுப்பு மனோபாவங்களுக்கும், போதைப் பழக்கத்திற்கும்கூட, மனநல பிரச்னைகளே பெரிதும் காரணமாகின்றன.

மனநல ஆலோசனைகளை வழங்குவது தற்கொலைகளைத் தடுப்பதில் ஒரு யுக்தி மட்டுமே. அது மட்டுமே முழுமையான தீர்வில்லை. பொருளாதார நெருக்கடிகள், வேலை வாய்ப்பின்மை, சம்பளக் குறைப்பு, கல்வி சார்ந்த நெருக்கடிகள், உறவுகள் சார்ந்த புரிதலின்மை போன்ற காரணங்களை நாம் புரிந்துகொண்டு, அதற்கேற்ப குழுவாய் இணைந்து, சமூக பாதுகாப்பையும், வாழ்வதற்கான வழிகளையும் உருவாக்க வேண்டும்.

மனரீதியான பிரச்னை என்றாலே மனநோய்தான் என்றும், இதனை சரி செய்ய முடியாதென்றும் பலரும் நம்புகிறார்கள். அதேபோல், மனநலம் சார்ந்த பிரச்னை என்றாலே, வெளியே அதைப் பேசக்கூடாதது, யாரிடத்திலும் பகிரக்கூடாதது போன்ற எண்ணங்களில் இருந்தும் வெளியே வரவேண்டும்.

இன்றைய நவீன யுகத்தில், நாம் எல்லோருக்கும் ஏதேனும் ஒரு சூழலில் அல்லது சந்தர்ப்பத்தில், மனநலம் சார்ந்த் பிரச்னைகள் உருவாகலாம். வரும் காலங்களிலும் இது அதிகரிக்கவே செய்யும். எனவே, மனநலம் சார்ந்த தவறான கற்பிதங்களில் இருந்தும், தவறான நம்பிக்கைகளில் இருந்தும் சமூகம் வெளியே வரவேண்டும். மனநலம் சார்ந்த அறிவியல் பார்வையை சமூகத்தில் உருவாக்க வேண்டும்.

மனநல மருத்துவமனை என்றாலே, மனநோயாளிகளை பூட்டி வைக்கும் இடம் என்ற மனநிலையில் இருந்து விடுபட்டு, முழுக்க முழுக்க இதனை ஒரு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாய் கட்டியெழுப்ப வேண்டும். மனநலம் சார்ந்து, உலகத் தரமான ஆராய்ச்சிகள் மட்டுமின்றி, அதிநவீன சிகிச்சைகளும் கிடைக்கக் கூடிய இடமாக இதனை உருவாக்க வேண்டும். சீனாவைப் போன்று, மூளை நரம்பியல் மற்றும் நுண்ணறிவு சிந்தனைகளின் செயல்பாடுகளில், உலகத்தரமிக்க ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தொகுப்பு: காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்

Related Stories: