மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனங்களில் இணைப்பு சக்கரங்களை அகற்றக்கூடாது

தர்மபுரி, பிப். 23: மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களில் உள்ள இணைப்பு சக்கரங்களை அகற்றிவிட்டு, சாதாரண வாகனம் போல பயன்படுத்தக்கூடாது என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென பல்வேறு திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறது. இத்திட்டங்களில் முத்தான திட்டமான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டமாகும். தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், சாதாரண டூவீலர் வாகனத்தை ஓட்ட இயலாத காரணத்தினால், தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்டு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. சாதாரண டூவீலர் வாகனத்தை ஒட்ட இயலாத இருகால்கள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஒரு கால் பாதிக்கப்பட்டு இருகைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும். இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களை பிறர் பயன்படுத்துக்கூடாது. இணைப்பு சக்கரங்களை அகற்றிவிட்டு சாதாரண டூவீலர் வாகனமாக பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்துவது தெரிய வந்தால், வாகனம் பறிமுதல் செய்யப்பட வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: