திமுக கூட்டணியில் இணைய ராமதாஸ் முடிவு? அவசர செயற்குழுவில் ஆலோசனை

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அவசர நிர்வாக குழு கூட்டம் நேற்று நடந்தது. 21 பேர் கொண்ட நிர்வாக குழு கூட்டத்தில் பாமகவின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர்  காந்தி, பொதுச்செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையத் மன்சூர் உசேன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இரண்டரை மணி நேரம் நடந்த இந்த அவசர நிர்வாக குழு கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. ராமதாஸ் மற்றும் அன்புமணி என இரு பிரிவுகளாக பிரிந்து செயல்படும் நிலையில் அன்புமணி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார். ராமதாஸ் எந்த கூட்டணியில் இணைவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ள சூழலில் நிர்வாக குழு கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

மேலும் அன்புமணி அதிமுக கூட்டணியில் உள்ளதால் அதில் ராமதாஸ் இணைய ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருவதால், அதில் அவர் இணைய வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ராமதாஸ் திமுகவுடன் இணைய அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆலோசனை கூட்டம் முடிந்து வெளியில் வந்த சேலம் எம்எல்ஏ அருள் கூறுகையில், வெற்றி பெறும் கூட்டணிக்கே செல்வோம் அதனை ராமதாஸ் அறிவிப்பார். பிப்ரவரி இறுதியில் ராமதாஸ் கூட்டணி குறித்து அறிவிப்பார். பிரியாணி தம் போடப்பட்டுள்ளது. சூடு ஆறும் வரை கொஞ்சம் பொறுத்திருங்கள். ராமதாஸ் மீது அனைத்து கட்சிகளிடமும் நிறைந்த மரியாதை உள்ளது. இதனை இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் பார்ப்பீர்கள். தவெகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு என்னை போட்டு வாங்காதீர்கள். நிச்சயமாக கூட்டணியில் தான் போட்டியிடுவோம் என்றார்.

 

Related Stories: