நரிமூலா, வடவயல் பகுதியில் பொதுமக்கள் அமைத்த மின் வேலி

*அதிகாரிகள் நேரில் கள ஆய்வு

கூடலூர் : ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட குனில்வயல், ஏச்சம்வயல், வடவவயல், மண் வயல் பகுதி வழியாக சுமார் 8 கி.மீ தூரத்திற்கு கிராம மக்கள் சார்பில் சூரிய ஒளி மின்வேலி அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து விவசாய நிலங்களுக்குள் வரும் காட்டு யானைகளால் விவசாய பயிர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்காக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த மின் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் நரி மூலா மற்றும் வடவயல் பகுதியில் உள்ள பழங்குடியினர் காலனி வழியாக மின்வேலி அமைக்க முயன்ற போது வனத்துறையினர் தடுத்ததால் பிரச்னை ஏற்பட்டது.

வனத்துறையை கண்டித்து நேற்று முன்தினம் கிராம மக்கள் ஊர்வலமாக வந்து வனத்துறை அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் பிரச்னைக்குரிய இடத்தில் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்தனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று நரிமூலா, வடவயல் பகுதியில் கூடலூர் ஆர்டிஓ குணசேகரன்,தாசில்தார் முத்துமாரி, டிஎஸ்பி வசந்தகுமார் மற்றும் வருவாய்த்துறையினர், காவல் துறையினர், நில அளவீட்டு துறையினர் உதவியுடன் உதவி வன பாதுகாவலர் துஷார் சிண்டே, வனச்சரகர் ராதாகிருஷ்ணன் மற்றும் வனத்துறையினர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்குப்பின் பழங்குடியினர் குடியிருப்புகள் வழியாக மின்வேலி அமைக்க பழங்குடியினர் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி அதன் கடிதம் அளித்து,வனத்துறையிடம் ஒப்புதல் பெற்று மின் வேலி அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மின் வேலி அமைக்கும் பிரச்னைக்கும் சமூகத்தீர்வு காணப்பட்டதால் கிராம மக்கள் அரசு அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories: