ரயில்வே சுரங்க பாதையில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்களால் விபத்து அபாயம்

*அகற்ற கோரிக்கை

பள்ளிபாளையம் : டிராக்டரில் கொண்டு செல்லப்பட்ட ஜல்லி கற்கள் காவேரி சுரங்கபாதையில் சிதறி கிடப்பதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.பள்ளிபாளையம் காவேரி ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள வாகன நுழைவு பாலம், ஆற்று நீர் மட்டத்தை விட குறைவாக இருப்பதால், மழை நேரங்களில் பாலத்தின் அடியில் தண்ணீர் தேங்குகிறது. இதற்காக நெடுஞ்சாலைத்துறையில் பணியாளர் அமர்த்தப்பட்டு, மழை நேரங்களில் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றப்பட்டு வருகிறது.

சுரங்க பாதையின் நுழைவு பகுதியில் இரண்டு புறமும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளதால், இதில் ஏறி இறங்கும் லாரிகள் பலவற்றிலிருந்து கரும்புகள் சரிந்து விழுகிறது. ரோட்டில் கிடக்கும் கரும்புகள் வாகனங்களால் நசுக்கப்பட்டு பாலத்தின் நீர் வெளியேறும் துவாரங்களை அடைத்துக்கொள்கிறது.

இதனால் சிறு மழை பெய்தாலே பாலத்தின் அடியில் சிறுவாகனங்கள் செல்வதில் தடையேற்படும். பாலத்தின் அடியில் கொட்டும் கரும்புகளை, தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் பணியாட்களை அமர்த்தி உடனுக்குடன் அப்புறப்படுத்த கோரிக்கை எழுந்த போதிலும், அதற்கான நடவடிக்கைகள் ஏதும் நடப்பதில்லை.

இந்த நிலையில், நேற்று அந்த வழியாக ஜல்லி லோடு ஏற்றிச்சென்ற டிராக்டர், வேகத்தடையின் மீது ஏறி இறங்கியதால், ஜல்லிக்கற்கள் சாலையில் கொட்டி சிதறியது. ஜல்லிகள் அப்புறப்படுத்தப்படாததால் சாலை முழுவதும் சிறு சிறு ஜல்லிகள் சிதறி கிடக்கிறது.

இதனால் டூவீலரில் செல்வோர் தடுமாற்றம் அடைந்து விபத்து அபாயமும் ஏற்பட்டது. மழை பெய்தால் ஜல்லி கற்கள் நீர் துவாரங்களை அடைத்துக்கொண்டு வெள்ளம் வெளியேறாமல் தேங்கும் அபாயம் இருப்பதால், சுரங்க பாதையில் சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: