மூணாறு : மூணாறில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கேரள மாநிலம் மூணாறை சுற்றியுள்ள மாட்டுபட்டி, எக்கோ பாய்ண்ட், குண்டளை, போதமேடு, கேப் ரோடு ஆகிய சுற்றுலா பகுதிகள், மூணாறு நகர், இக்கா நகர், தேவிகுளம் உள்பட பல பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.
தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் உள்ள உணவு கழிவுகள் உள்பட பல்வேறு கழிவுகளை நினைத்த இடத்தில் வீசுவதால், அவற்றை உண்ணுவதற்காக தெருநாய்கள் படையெடுக்கின்றன. இதனால் தற்போது மூணாறு நகரில் தெரு நாய்கள் அதிகரித்துவிட்டன.
இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மூணாறில் கடந்தாண்டு மே 25ம் தேதி, நாய் கடித்து 6 சுற்றுலா பயணிகள் காயம் அடைந்தனர். அடுத்த இரண்டு நாட்களில், தேவிகுளத்தில் 5 மாணவ, மாணவிகளை தெருநாய்கள் கடித்தன. மேலும் கடந்த மாதம் எக்கோ பாய்ண்ட்டில் ஆறு சுற்றுலா பயணிகள் உள்பட ஏழு பேரை தெருநாய் கடித்த சம்பவமும் நடந்துள்ளது.
கேரளாவில் 2022ம் ஆண்டு முதல் ஊராட்சிகள் தோறும் சில பகுதிகளில் ஏபிசி மையங்கள் (அனிமல் பெர்த் கன்ட்ரோல்) செயல்பட்டு வருகின்றன. இடுக்கி மாவட்டத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. மூணாறு, தேவிகுளம் ஆகிய ஊராட்சிகளில் பயணிகளின் நலன் கருதி ஏபிசி. மையங்கள் அமைப்பது உள்பட தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
