“தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது : முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: உலக தாய்மொழி தினத்தையொட்டி, “தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது என முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். உலகிலுள்ள சுமார் 7,000 மொழிகளின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில், ஆண்டுதோறும் பிப்.21-ம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. 1999-ல் யுனெஸ்கோ அறிவித்த இத்தினம், தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்துவதுடன், அழிந்து வரும் மொழிகளை மீட்டெடுக்கவும் வழிவகை செய்கிறது. இளைய தலைமுறையினரிடம் தாய்மொழியின் சிறப்பை கொண்டு சேர்ப்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

*தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழே நீ வாழ்ந்திடு!

இன்று உலகத் தாய்மொழிகள் நாள்! ஏராளமானோர் உயிர்கொடுத்துக் காத்த நம் உயிர்நிகர் தமிழ்மொழியை எத்தனை சிறப்புகள் சொல்லி அழைத்தாலும் “தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது. தலைவர் கலைஞரின் இந்த வரிகளைப் பாடலாக்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு என் நன்றி!

நம் தமிழைக் காத்து – அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்த்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு!,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

*தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “சர்வதேச தாய்மொழி நாள் இன்று!

நம் அனைவரின் உயிரோடும் உணர்வோடும் கலந்த, நம் தாய்மொழி தமிழைப் போற்றி மகிழ்வோம்.

எந்த வடிவில் மொழித் திணிப்பு வந்தாலும், கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஒன்றிணைந்து வீழ்த்துவோம்!”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

*மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில், “மரபணுவில் உருவாகி, தாய்ப்பாலில் உணவாகி, செவிப்பொறியில் ஒலியாகி உடலுக்குள் உயிராகி நிற்பது என் தாய்மொழி.

அடிபட்டால் அரற்றவும், உறக்கத்தில் உளறவும், சிரமப் பொழுதுகளில் சிந்தித்திருக்கவும் எனக்குச் சொல்லாகி வருவது தமிழ்.

அவரவர் தாய்மொழி அவரவர் வாழ்வு. எனக்கென் தாய்மொழி என்றென்றும் என் சுவாசம்.

மொழியால் உருவானேன். மொழிவதால் வாழ்கின்றேன்.

தாய்மொழி நாளில் தமிழர்களை வாழ்த்துகிறேன்.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: