தனித்தமிழில் உரையாடுகிறவனை விசித்திர விலங்காய்ப் பார்க்காதீர்கள் :கவிஞர் வைரமுத்து உலக தாய்மொழி தின பதிவு

சென்னை : ஒரு மொழி வாழ்வது அது பேசப்படுவதால்தான் என்று உலக தாய்மொழி தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து வாழ்த்து  தெரிவித்துள்ளார். உலகிலுள்ள சுமார் 7,000 மொழிகளின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில், ஆண்டுதோறும் பிப்.21-ம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. 1999-ல் யுனெஸ்கோ அறிவித்த இத்தினம், தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்துவதுடன், அழிந்து வரும் மொழிகளை மீட்டெடுக்கவும் வழிவகை செய்கிறது. இளைய தலைமுறையினரிடம் தாய்மொழியின் சிறப்பை கொண்டு சேர்ப்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

உலக தாய்மொழி தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து கவிதை பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில்,

“இன்று
உலகத் தாய்மொழித் திருநாள்

மொழி என்பது
ஒலிக்கருவி அல்ல;
உயிரி

ஏன் காக்க வேண்டும்
மொழியை?

அது
காலம்சேமிக்கப்பட்ட
கலம்

மரபு – வரலாறு
மருத்துவம் – பண்பாடு
கலை – இலக்கியம்
விழுமியம் – பெருமிதம்
முதலானவற்றைத்
தலைமுறைகளுக்குக் கடத்தும்
ஆவண வாகனம்

ஒரு மொழி வாழ்வது
அது பேசப்படுவதால்தான்

ஒரு மொழிபேசும்
கடைசி மனிதனின் குழியில்
மொழியும் சேர்த்தே
புதைக்கப்படுகிறது

தமிழர்கள்
நிறையப் பிள்ளை பெறுங்கள்

அருள்கூர்ந்து
தாய்மொழியில் பேசுங்கள்;
எழுதுங்கள்

தயவுசெய்து
தாய்மொழியில் திட்டுங்கள்

தனித்தமிழில்
உரையாடுகிறவனை
விசித்திர விலங்காய்ப்
பார்க்காதீர்கள்;
அவன்தான் மொழியின்
கடவுக் கடவுள்

அதிகார மையங்களில்
புழங்காமல்,
அரசியலின் கதகதப்பு
இல்லாமல்,
தாய்மொழி வழிக்கல்வி
தழைக்காமல்,
அறிவியல் கருவிகளை
ஆளாமல்
தழைக்காது தாய்மொழி

ஒவ்வொரு
தேசிய இனத்துக்கும்
இது அச்சடித்த எச்சரிக்கை

தாய்மொழி புழங்குக;
தாய்மொழி வழங்குக;
எவ்வினத்திலும்
தாய்மொழியே விளங்குக”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: