திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்கள் சாதனையை நாங்களே விஞ்சுவோம்: சட்டப்பேரவை நிறைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை

சென்னை: நான் இந்த 5 ஆண்டு காலத்தில் எனக்கும், என் மனச்சாட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டு உழைத்திருக்கின்றேன். இன்னும் உழைக்கக் காத்திருக்கின்றேன். நாளைய தமிழ்நாடு நிச்சயம் நெஞ்சில் தாங்கி நம்மை வரவேற்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாளை நாங்கள் அமைக்கப் போகக்கூடிய திராவிட மாடல் 2.0 ஆட்சி, எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். நூற்றாண்டைக் கடந்து பெருமையோடு இயங்கி வருகிறது இந்தப் பேரவை.

அனல் பறக்கும் விவாதம் நடைபெறக்கூடிய நேரத்தில், கருத்து மோதல்களை எதிர்கொண்டு, கட்சி வேறுபாடுகள் வெளிப்படுகையில் தன்னுடைய அனுபவத்தினாலும், அபார நினைவாற்றலாலும் அமைதிப்படுத்தக்கூடியவர், பேரவையின் மூத்த உறுப்பினர் அவை முன்னவர் ஆருயிர் அண்ணன் துரைமுருகன். அவர் தற்போது இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் விரைந்து உடல்நலம் பெற்று வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

குறைகளைச் சொல்பவர்கள் நம் முன்னேற்றத்திற்குச் சிறகுகளைத் தரக்கூடியவர்கள் என எண்ணிச் செயலாற்றுபவன் நான். அரசுக்குத் தக்க யோசனைகளைக் கூறுவதிலும், குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலும், கண்ணியமான முறையைக் கடைப்பிடித்து, ஒத்துழைப்பு நல்கிய எதிர்க்கட்சி தலைவர் இன்றைக்கு வரவில்லை. இருந்தாலும், அவருக்கும், மற்றுமுள்ள கட்சித் தலைவர்களுக்கும், எங்கள் சாதனைகளுக்கெல்லாம் தோளோடு தோள் நின்ற தோழமைக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்றில்லாமல், அன்போடும் பாசத்தோடும், என்றென்றும் என்னிடத்திலே உரிமையோடு அன்புகாட்டி வரும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 24-1-2026 அன்று இதே பேரவையில் நான் உரையாற்றும்போது குறிப்பிட்டதை இப்போது நினைவுகூர்கிறேன். ‘‘2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக 6வது முறையாக வெற்றி பெற்றபோது, ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும், இன்னொரு பக்கம் எனக்கு கவலையும் இருந்தது, அதை நான் மறைக்க விரும்பவில்லை.

இந்தப் பொறுப்பை நான் எப்படி செய்யப் போகிறேன்? வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? மக்கள் விரும்பக்கூடிய வகையில் ஆட்சி நடத்த முடியுமா? மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஆட்சி நடத்த முடியுமா? என்ற கவலைதான் எனக்கு இருந்தது’’ என்று சொல்லியிருந்தேன். முந்தைய அரசுகளின் செயல்பாட்டின் காரணமாக விளைந்த மிக மோசமான பின்னடைவு; நமக்கு ஒத்துழைக்காத, ஓரவஞ்சனை செய்யக்கூடிய ஒன்றிய அரசு இரண்டுக்கும் இடையில்தான் நாம் இருந்தோம்.

நமக்குப் பெரும் வெற்றியைத் தந்து பொறுப்பை ஒப்படைத்த மக்களின் எதிர்பார்ப்புக்கு இடையில் ஆட்சிக்கு வந்தோம். தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளும் எப்போது வளரும் என்ற ஏக்கத்தில் இருந்தவர்களுடைய வாட்டத்தைப் போக்கி, சமச்சீரான வளர்ச்சியை இந்த 5 ஆண்டுகளில் அடைந்திருக்கின்றோம். திராவிட மாடல் அரசு தீட்டிய திட்டங்களை, இயற்றிய சட்டங்களை மக்களின் முன் வைத்துள்ளோம். நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் அதனை ஒரு காரணமாகச் சொல்லிக் கொண்டு சும்மா இருக்காமல் நிறைய திட்டங்களைச் செயல்படுத்தி இருக்கிறோம்.

திராவிட மாடல் அரசால், இந்த 5 ஆண்டுகளில் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம், இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் குடமுழுக்கு, குழந்தைகள் முதல் முதியோர் வரை, ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை, இளைஞர்கள், பெண்கள்,

விவசாயிகள், நெசவாளர்கள், விளிம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிட, பழங்குடியின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் என அனைத்துச் சமுதாயத்தினரும் வாழ்வில் உயர்வு கண்டிட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதை எண்ணிப் பார்க்கிறேன். இதற்கெல்லாம் நான் மட்டுமா காரணம்? இல்லை! இல்லவே இல்லை! ஒட்டுமொத்த தமிழர்களும் என் கையோடு கைசேர்த்து, எனக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் வழங்கி, பல்வேறு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய வாய்ப்பையும், வலிமையையும் தந்து எனக்கு உதவினார்கள்.

நான் இந்த ஐந்தாண்டு காலத்தில் எனக்கும், என் மனச்சாட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டு உழைத்திருக்கின்றேன். இன்னும் உழைக்கக் காத்திருக்கின்றேன். நாளைய தமிழ்நாடு நிச்சயம் நெஞ்சில் தாங்கி நம்மை வரவேற்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாளை நாங்கள் அமைக்கப் போகக்கூடிய திராவிட மாடல் 2.0 ஆட்சி, எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு இருக்கும்.

திமுக என்ற மாபெரும் இயக்கத்தின் தலைவராக அமரவைத்து, தமிழ்நாட்டின் முதல்வராக உழைத்த நான், லட்சக்கணக்கான உடன்பிறப்புகள் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன். எவரேனும் விடுபட்டிருந்தால், அவர்களையும் இணைத்துக்கொண்டு, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் வெல்வோம். மீண்டும் வந்து ஆட்சி அமைப்போம். மீண்டும் வந்து தமிழ் மக்களுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

* ‘ஆளுநருக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது’ முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘ஆளுநருக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. தமிழர்களுடைய சுயமரியாதை எள் முனையளவு சீண்டப்பட்டாலும், அது யாராக இருந்தாலும், எதிர்க்குரல் கொடுக்கும் திசையில் முதல் நபராக நான் இருப்பேன். தமிழர் பண்பாட்டை மனதில் கொண்டு, ஆளுநருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.

Related Stories: