சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என சென்னை நந்தனத்தில் நடக்கும் திமுக ஐ.டி. விங் நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் ‘அனைத்து மாவட்டங்களிலும் வார் ரூம் அமைத்து செயல்பட்டு வருகிறோம். வாக்குகளை உறுதி செய்ய ஐடி விங் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டு பெற்றது.
எஸ்.ஐ.ஆர் பணிகளில் மக்களின் வாக்குரிமையை உறுதி செய்ததில் ஐ.டி. விங் பணி அளப்பரியது. இந்தியாவிலேயே வாக்குச்சாவடி அளவில் டிஜிட்டல் ஏஜெண்டுகளை வைத்துள்ளது திமுக மட்டும்தான். ஹாஷ் டேக்கை ட்ரெண்ட் செய்வது அல்ல உங்கள் வேலை, அஜெண்டாக்களை செட் செய்வதே. ஆன்லைன் மட்டுமன்றி ஆப் லைனிலும் ஐ.டி. விங் பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஐடி விங் நிர்வாகிகள் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பிப் பார்க்க வைக்க முடியும். தற்காப்பு ஆட்டத்தை மட்டும் ஆடிக்கொண்டிருக்கக் கூடாது, தாக்குதல் ஆட்டத்தையும் ஆட வேண்டும். தொகுதிகளில் செய்துள்ள பணிகளை உள்ளூர் வாட்ஸ் ஆப் குழுக்களில் ஷேர் செய்துகொண்டே இருக்க வேண்டும். சாதனைகளை எளிதாக நிறைவேற்றிவிட்ட நாம், அதனை கொண்டு செல்வதில் எளிதாக இருந்துவிடக் கூடாது.
போலிச் செய்திகளை எதிர்கொண்டு அம்பலப்படுத்துவதே நம்முடைய பிரதான பணி. அவதூறு, பொய் செய்திகள் என அனைத்தையும் அம்பலப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் கலவரத்தை உண்டாக்கும் வகையில் எதிரணியினர் செயல்பட்டு வருகிறார்கள். எதிர்க்கட்சியினரின் பொய்ச் செய்தி, அவதூறுகளை முறியடிக்க வேண்டும். பொய் செய்தியை படிப்போர் பாதி பேர் நம்முடைய விளக்கத்தை படித்தாலே அது நமக்கு வெற்றிதான்.
பொய் செய்திகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்க வேண்டும். திமுகவின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட ஒன்று; அது எவ்வளவு பெரிது என்பதே தெரிய வேண்டும். திராவிடத்தால் எழுந்தோம் என்ற எண்ணத்தில் எதையும் எதிர்பார்க்காமல் திமுகவை ஆதரிப்பவர்கள் ஐடி விங்கைச் சேர்ந்தோர்’ எனவும் உரையாற்றினார். மேலும் இந்த கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தலுக்காக ‘ஆடுகளம்’ என்ற பெயரில் புதிய செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
