The Hundred கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுக்குத் தடை?: இந்திய உரிமையாளர்களின் அதிரடி முடிவால் பரபரப்பு

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடத்தும் ‘The Hundred’ கிரிக்கெட் தொடரின் 2026ம் ஆண்டு சீசனில், பாகிஸ்தான் நாட்டின் முன்னணி வீரர்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காது என்ற தகவல் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் சுமுகமற்ற அரசியல் உறவுகள் மற்றும் எல்லைப் பதற்றங்களின் நேரடித் தாக்கம் இப்போது சர்வதேச கிரிக்கெட் லீக் போட்டிகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, The Hundred தொடரில் பங்கேற்கும் எட்டு அணிகளில் நான்கு முக்கிய அணிகளின் உரிமையை இந்தியத் தொழிலதிபர்கள் வாங்கியுள்ள நிலையில், அவர்கள் பாகிஸ்தான் வீரர்களைத் தங்கள் அணியில் சேர்க்கப் போவதில்லை என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, மாஞ்செஸ்டர் ஒரிஜினல்ஸ், ஓவல் இன்வின்சிபிள்ஸ், சதர்ன் பிரேவ் மற்றும் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் ஆகிய நான்கு அணிகளில் இனி பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது.

லண்டனில் நடைபெறவுள்ள இந்தத் தொடருக்கான ஏலப் பணிகள் மார்ச் 11-ஆம் தேதி மகளிர் பிரிவிற்கும், மார்ச் 12-ஆம் தேதி ஆடவர் பிரிவிற்கும் நடைபெறவுள்ளன. பிபிசி (BBC) அறிக்கையின்படி, சுமார் 18 நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும், இந்திய முதலீட்டாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நான்கு அணிகளும் பாகிஸ்தான் வீரர்களை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த முடிவு ஐபிஎல் தொடரோடு மட்டுமல்லாமல், உலகெங்கிலும் இந்திய உரிமையாளர்களைக் கொண்ட மற்ற லீக் போட்டிகளுக்கும் பரவியுள்ளது. ஏற்கனவே தென்னாப்பிரிக்காவின் SA20 மற்றும் மேற்கிந்திய தீவுகளின் CPL போன்ற தொடர்களில் இந்திய உரிமையாளர்களின் அணிகள் பாகிஸ்தான் வீரர்களைத் தவிர்த்து வருகின்றன.

கடந்த காலங்களில் ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், முகமது அமீர் மற்றும் ஷதாப் கான் போன்ற நட்சத்திர பாகிஸ்தான் வீரர்கள் ‘தி ஹண்ட்ரட்’ தொடரில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஆனால், 2026-ஆம் ஆண்டு ஏலத்தில் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்திய உரிமையாளர்களைக் கொண்ட அணிகள் புறக்கணிப்பதால், மீதமுள்ள நான்கு அணிகளாவது இவர்களை ஏலம் எடுக்குமா அல்லது பாகிஸ்தான் வீரர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்படுவார்களா என்பது ஏலத்தின் முடிவில்தான் தெரியவரும்.

Related Stories: