அம்பிகைக்கு சேவகம் பலகோடி யோகினிகளில் முக்கியமானவர் நிரயாதேவி. இந்த யோகினி அழகான பெண்ணின் உடலும், எடையான் பூச்சியின் முகமும் (வெட்டுக் கிளி போன்ற ஒரு இனத்தைச் சேர்ந்தவை)கொண்டு காட்சி தருகிறாள். இவள் ஒரு கையில் திரிசூலமும் மற்றொரு கையில் ருத்ர முத்திரையும் தாங்கி காட்சி தருகிறாள்.
எடையான் பூச்சியின் முகம் ஏன்?
நமது முன்னோர்கள், உலகில் காணப் படும் அனைத்தையுமே இறைவனின் வடிவமாகவே கண்டார்கள். புல், பூச்சி முதற்கொண்டு பெரிய யானை, திமிங்கலம் வரை அனைத்துமே அவர்களை பொறுத்த வரையில் இறைவனின் வடிவம்தான். ஆகவே, இறைவனுக்கு சேவகம் செய்யும் முக்கியமான யோகினிக்கு ஒரு எடையான் பூச்சியின் முகத்தை சொல்லி இருக்கிறார்கள். இந்த எடையான் பூச்சி, வயல்வெளிகளில் சுற்றித்திரியும் மற்ற பூச்சிகளை உண்டு உயிர்வாழக்கூடிய ஒன்றாகும்.
வயலில் இருக்கும் புழு பூச்சியை இது உண்டுவிடுவதால், வயலில் இருக்கும் பயிர் நன்றாக விளைகிறது. அதே போல ஒரு பக்தன், தனது மனம் என்னும் நிலத்தை உழுது, அதில் பக்தி அல்லது யோகம் என்னும் விதையை போட்டு, சாதனை என்னும் நீரை ஊற்றி வளர்க்கும் ஞானம் என்னும் பயிரை, உலகாய விஷயங்கள் என்னும் பூச்சிகள் வந்து அழித்து விடாமல் இருக்க இந்த யோகினி அருள் புரிகிறாள்.
அதை உணர்த்தவே இவளுக்கு எடையான் பூச்சியின் முகம். அதே போல, இந்தப் பூச்சியானது ஒரு இடத்தில் ஆடாமல் அசையாமல் சிலை போல நிற்கும். இதனருகே ஒரு இறை வந்ததும் அதை சட்டென உண்ணும். அதைப்போல ஒரு உபாசகனும், ஆடாமல் அசையாமல் தியானமும் உபாசனையும் செய்யும் போது, ஞானம் மற்றும் அருள் என்னும் இறையை சரியான நேரத்தில் அவன் பெற்றுக்கொள்ள இந்த தேவி உதவுகிறாள். இந்தப் பூச்சியைக் கண்டால், இது எப்போதும் கை குவித்து இருப்பது போலவே காட்சி தரும். ஒரு மனிதன், இதயத்துக்கு நேரே கைகளை குவிப்பதற்கு அஞ்சலி முத்திரை என்று பெயர்.
இது இதயத்தில் இறைவன் கோயில் கொண்டிருக்கிறான் என்று காட்டுகிறது. அதே போல, அடக்கத்தின் சின்னமாக கருதப்படுகிறது. ஆகவே எடையான் பூச்சியின் முகத்தை உடைய இந்த தேவி, பக்தர்களிடையே அடக்கத்தையும், இதயத்தில் இறைவன் இருக்கிறான் என்ற ஞானத்தையும் கொடுக்கிறாள், என்பதை இவள் முகம் காட்டுகிறது.எடையான் பூச்சிதான் இருக்கும் இடத்துக்கு ஏற்ப, தனது உடலின் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும். இதனால் தனது எதிரிகளிடத்தில் இருந்து இது தப்பித்துக் கொள்ளும்.
அதே போல, ஒரு பக்தன் என்னதான் ஆன்மிக வாழ்வில் முன்னேறினாலும், அவனது அந்த ஞானமும், பக்தியின் முதிர்ச்சியும் ரகசியமாகவே இருக்க வேண்டும். ஆகவே, சாதகன் தனது ஞானத்தையும் பக்தியையும் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டான். ஏனென்றால், இவனது பக்தியின் முதிர்ச்சியும் ஞானமும் வெளியில் தெரிந்தால், அது மற்றவர்களால் இவனது சாதனைக்கு ஆபத்தை கொண்டு வரலாம். இதனால் இவனது ஆன்மிக முன்னேற்றம் தடைப்படலாம். ஆகவே, ஒரு உண்மையான சாதகன் ஆன்மிகத்தில் முன்னேறும் போது, அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டான். அந்த நிலையைதான், நிறத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை உடைய எடையான் பூச்சியின் தலையை கொண்ட இந்த யோகினி நமக்கு காட்டிக் கொடுக்கிறாள்? கையில் திரிசூலம் ஏன்?
மூன்று கூரிய முனைகளை உடைய திரிசூலம், கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்ற மூன்று காலங்களையும் குறிக்கிறது. இந்த சூலத்தை இந்த யோகினி கையில் ஏந்தி இருப்பதால், இவள் முக்காலத்தையும் உணரும் சக்தியை தனது உபாசகனுக்கு அளிக்கிறாள் என்று தெரிய வருகிறது. பலக்கோடி யோகினிகளில், முக்காலங்களை உணர்த்தும் ஆற்றல் கொண்ட யோகினி இவள்தான் என்றால், அது மிகையில்லை. அதை உணர்த்தவே இந்த தேவிக்கு கையில் சூலமும், எடையான் பூச்சியின் முகமும் சொல்லப்படுகிறது.
மழைவருவதை முன்கூட்டியே அறிவிக்கும் பூச்சி எடையான் பூச்சி. அந்த வகையில், எதிர்காலத்தில் வரப்போகும் ஆபத்துகளை உணர்த்தி, சாதகனை அந்த ஆபத்தில் இருந்து காப்பவள்இந்த யோகினி. அதற்காகவே இந்த யோகினிக்கு எடையான் பூச்சியின் முகம் இருக்கிறது.
வலது கையில் ருத்ர முத்திரை ஏன்?
ஆட்காட்டி விரல் மற்றும் மோதிரவிரல் நுனியுடன் பெருவிரல் இணைத்து மற்ற விரல்களை நீட்டி வைத்தால், அதுவே ருத்ர முத்திரை எனப்படும். இந்த முத்திரையை தேர்ந்த குருவின் வழிகாட்டுதலோடு, ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் செய்தால், ரத்த நாளங்களில் உள்ள அடைப்பு நீங்கும், குடலிறக்கம் மற்றும் அடிவயிறு வலி சரியாகும். வெரிகோஸ் வெயின் சரியாகும். மனத்தில் அவ்வப்போது ஏற்படும் இனம் தெரியாத அச்சம் நீங்கும். இந்த முத்திரையானது, ருத்திரன் அதாவது சிவனின் அம்சத்தில் தோன்றியதாக சொல்லப்படுகிறது. உடலின் மணிப்பூராக சக்கரத்தை தூண்டும் முத்திரை என்று யோக சாஸ்திர வல்லுனர்கள் சொல்கிறார்கள்.
இந்த முத்திரையை கையில் தாங்குவது மூலம், இந்த யோகினி, சிவ அம்சம் உடையவள் என்பதையும், தனது உபாசகனின் மணிப்பூரக சக்கரத்தை தூண்டுபவள் என்பதையும், உபாசகனின் பயங்களையும் நோய்களையும் போக்குபவள் என்பதை காட்டுகிறாள்.
நிரயா யோகினியின் பெயர் விளக்கம்
சமஸ்கிருதத்தில், “நிரயா’’ என்றால் வேட்டையாடுதல், முன்னேறுதல் என்று பல பொருள் இருக்கிறது. இந்த யோகினி, தனது உபாசகனின், உள்ளும் புறமும் இருக்கும் எதிரிகளை வேட்டையாடுவதாலும், அவனை ஆன்மிக வாழ்க்கையில் முன்னேற்றுவதாலும், இவளுக்கு இந்த நாமம் ஏற்பட்டது என்று சொல்வார்கள்.
இந்த யோகினியை வழிபடுவதால் வரும் பலன்கள்
இந்த யோகினியை வழிபடுவதால்,
முக்காலத்தையும் உணர முடியும்.
“நன்றே வரினும் தீதே விளைகினும்
நானறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கேபரம் எனக்கு உள்ளயெல்லாம்
அன்றே உனதென்று அளித்து விட்டேன்’’
– என்று அபிராமி பட்டார் சொன்னார்.
அதாவது “என்றைக்கும் அழிவில்லாத நிலையுள்ளவளே, அருட்கடலே, இமையவனுக்குப் பிறந்த தாமரையே (அபிராமி), என் உடைமைகள் யாவும் எனதன்று உனதென்று என்றோ துறந்து விட்டேன்; (எனை ஆட்கொண்டதால்) இனி நன்மை தீமை எனப் பகுக்கும் அறிவைத் துறந்து, பற்றற்ற நிலை அடைந்தேன்’’ என்கிறார்.
நன்மை வந்த போது ஆனந்தக் கூத்தாடாமல், அதே சமயம் தீமை வந்த போது, துவண்டு போகாமல், நன்மையையும் தீமையையும் சமமாக பாவிப்பவனே யோகி. அனைத்தும் அம்பிகையின் செயல் என்று களங்கமற்ற மனதை அடைவதுதான் ஆன்மிக வாழ்வில் முக்கியமான ஒரு நிலை. அந்த நிலையை, இந்த யோகினி மிக எளிதாக தனது அடியவர்களுக்கு தருகிறாள்.
ஜி.மகேஷ்
