×

தப்பிக்க என்ன வழி?

மூன்றாம் பாவத்தைப் பற்றி நாம் தொடர்ந்து பார்த்து வருகின்றோம். சென்ற இதழில், ஜனவரி 28ஆம் தேதி உள்ள கிரக நிலைகளின் பிரகாரம் நடந்த ஒரு விஷயத்தைச் சொல்லி இருந்தேன். அதே தேதியில் எனக்கு நடந்த ஒரு உண்மையையும் நான் தெரிவிக்கின்றேன். எனக்கு அஷ்டம தசை நடந்து வருகிறது. இது முதல் குறிப்பு. அஷ்டம திசை என்பதால், சிற்சில உடல், மனக் கோளாறுகள் இருந்து கொண்டே இருக்கும். ஒரு நேரம் நன்றாக இருப்பது போல் இருக்கும். இன்னொரு நேரம் ஏதோ ஒரு வலி, அசௌகரியம் இருக்கும். அவ்வப்பொழுது மருத்துவரிடம் காட்டி ஏதோ சில மருந்துகளைச் சாப்பிட்டு சரி செய்து கொண்டே இருக்க வேண்டியதுதான். அப்படித்தான் இருக்கிறேன். இரண்டாவதாக, எட்டாவது ராசி என்பது மூன்றாவது ராசியைக் கட்டுப்படுத்தும்.

அதாவது, 8க்கு எட்டாம் பாவம் என்பதைச் சொல்லியிருந்தேன். மூன்றாம் பாவம் என்பது சிற்சில ஆசைகள், பிரயாணங்கள், சகோதரர்கள், காது, தோள்பட்டை என்று பல விஷயங்கள் அடங்கியது என்று பார்த்திருக்கிறோம். எப்பொழுதுமே ஒரு ராசி இயங்கும் போது, அதனுடைய முன் ராசியும், பின் ராசியும் இயங்கும். நம் வீட்டு சுவரில், ஒரு ஆணி அடித்தால், பக்கத்து வீட்டுக்காரர் சுவரில் சில அதிர்வுகளைத் தந்து அசௌகரியத்தை ஏற்படுத்தும்.மூன்றாம் பாவம் இயங்கும் பொழுது, அதனோடு தொடர்புடைய இரண்டாம்பாவமும், நான்காம் பாவமும் சில அதிர்வுகளைப் பெறும். இப்படி நடக்கும் போது, நன்மையும் உண்டு, பிரச்னைகளும் உண்டு. வாழ்க்கை என்பது அப்படித்தானே. எத்தனை நன்மைகள் நடந்தாலும், இடையில் சில தீமைகளும் நடந்தே தீரும்.

எத்தனை தீமைகள் நடந்தாலும், இடையிடையே சிற்சில நன்மைகளும் நடந்தே தீரும். வாழ்க்கையில் ஒரே அடியாக ஒருவரை முடக்கிப் போட்டுவிட்டால், அடுத்தடுத்து, அனுபவிக்க வேண்டிய கஷ்டங்களை அவன் எப்படி அனுபவிப்பான்? அதனால், தெளியவைத்து அடிப்பது போல, சிற்சில சந்தோஷங்களையும் கொடுத்துத்தான், நமக்குகஷ்டங்களையும் கிரகங்கள் கொடுக்கும். எட்டாம் பாவத்தின் பலன், மூன்றாம் பாவத்தில் தெரியும். மூன்று என்றால், காதில் பிரச்னை. இன்னொன்று தோள் களில் பிரச்னை. சில நாட்களுக்கு முன், தோளைத் தூக்க முடியாமல் (frozen shoulder) கஷ்டப்பட்டு கொண்டிருந்தேன். பிறகு அது சரியாகப் போயிற்று. மூன்று என்பது பிரயாணங்கள்.

பிரயாணங்களை முறையாகத் திட்டமிட முடிவதில்லை. டிக்கெட் எடுத்தும்கூட பயணங்களை ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு இருக்கிறது.இப்பொழுது, 28.1.2026 தேதி என்ன பிரச்னை என்பதைப் பார்ப்போம். ஏற்கனவே, 28-ஆம் தேதி கிரக நிலைகளை சொல்லி இருக்கிறேன். நான் விருச்சிக ராசி. விருச்சிக ராசிக்கு எட்டாம் இடத்தில், குரு இருக்கிறார். அஷ்டம திசையும் நடந்து வருகிறது. தசாபுத்தி ரீதியாகவும், கோள்சார ரீதியாகவும் எட்டாம் இடம் வலுப்பெறுகிறது. எட்டாம் இடம், இப்பொழுது மூன்றாம் இடத்தைப் போட்டுத் தொல்லை செய்யும்.

27 – ஆம் தேதி, மாலை வரை சரியாகத்தான் இருந்தேன். 28 – ஆம் தேதி காலை உணவு மெல்ல முடியவில்லை. கடைவாய் பல்லில் வலி. சனி கும்பத்தின் கடைசி டிகிரி அல்லது மீனத்தின் முதல் பாகையில் இருந்து எட்டாம் இடத்தைப் பார்க்கிறார். மீனத்தில் அஷ்டம குருவின் பூரட்டாதி பாதத்தில் இருக்கிறார். சுகஸ்தானத்தில் ராகு அமர்ந்திருக்கிறார்.

விருச்சிகத்துக்கு இரண்டு ஐந்துக்குரிய குரு எட்டாம் இடத்தில் இருக்கிறது.

சனி குரு இரண்டும் அஷ்டமாதி அனுபவத்தைக் கொடுக்கும் படியாக இயங்குகிறது. இரண்டாம் இடம் கண், பல் பிரச்னைகளை குறிக்கும் இடம்.ஏற்கனவே கண் பிரச்னை வந்துவிட்டதால், இப்போது பல் பிரச்னை வந்துவிட்டது. அடுத்து, எட்டாம் இடம் என்பது மூன்றாம் இடத்தையும் இயங்க வைக்கும். இந்த அடிப்படையில், இந்த பல் பிரச்னை, காது வலியை ஏற்படுத்தியது. பல் மருத்துவரிடம் சென்றேன். அவர் சோதனை செய்து பார்த்துவிட்டு, பல்லை எடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்றார். எட்டாம் இடம் + மூன்றாம் இடம் + இரண்டாம் இடம் எல்லாம் இணைந்து, அததனுடைய வேலையைக் கச்சிதமாகச் செய்து முடித்து விட்டதை அனுபவித்தேன். விருச்சிக ராசிக்கு அஷ்டமாதிபதி புதன் அப்போது மகரத்தில் (3ம் இடம்) இருந்தார். கூட சூரியன். ராசிநாதனாகிய செவ்வாயும் இருந்தார். எல்லாமே பல், நரம்பு குறிக்கும் கிரகங்கள். மிகப் பெரிய கஷ்டங்கள் அல்ல என்றாலும்கூட, அந்தந்த கிரக நிலைகள் ஏதோ ஒரு வகையில் விளையாடிக் கொண்டுதான் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்வதற்காக இதனைச் சொல்கிறேன்.

இப்பொழுது ஒரு கேள்வி கேட்கலாம். முன்கூட்டியே தெரிந்து கொண்டு இதனைத் தடுத்துக் கொண்டிருக்க முடியாதா? இந்த விஷயத்தில் ஒரே பதில்தான். அப்படி ஒரு வாய்ப்பு, கிரகங்கள் அனுமதித்தால் மட்டுமே, நாம் தடுத்துக் கொள்ளலாம். ஆனால், பெரும்பாலும் கிரகங்கள் அப்படி அனுமதிப்பதில்லை. பல்லில் வலி வரும் போல் இருக்கிறது என்று முதல் நாளே கிரக நிலைகளைப் பார்த்து யூகித்தாலும், என்ன செய்ய முடியும்? முன்கூட்டியே பல்லுக்கு மாத்திரை சாப்பிட முடியுமா? ஏனென்றால், 27 – ஆம் தேதி வரை பல் வலி வருவதற்கான அறிகுறியே இல்லை.

அதைப் போலத்தான் பல விஷயங்களும் நடக்கின்றன. முழுமையான மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட ஒருவர், மெடிக்கல் ரிப்போர்ட் பிரகாரம், எந்த விதமான தொந்தரவுகளும் இல்லை என்று நினைத்து, அவருடைய வேலையைப் பார்த்துக் கொண்டே இருந்த பொழுது, திடீரென்று மயங்கி விழுந்து இறந்து போனார் என்கிற செய்தியைப் பார்க்கிறோம். இதில் என்ன பெரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துவிட முடியும்?சின்ன சின்னப் பிரச்னைகளுக்கு ஏதோ ஒரு வழியை காட்டிக் கொண்டே வந்து, பெரிய பிரச்னை வரும்பொழுது, நம்முடைய மூளையை மழுங்கடித்து, நாம் தப்பிக்க முடியாத அளவுக்கு கிரகங்கள் செய்து விடுகின்றன என்பதே உண்மை. சில நேரங்களில், நம் கஷ்டங்களில் இருந்து தப்பிப்பதற்கு, ஜோதிடம் பார்ப்பது, பரிகாரங்கள் செய்வது, தெய்வத்திடம் முறையிடுவது என்றெல்லாம் செய்தாலும்கூட, விதி நாம் செய்த வினைகளின் விளைவைக் கொடுக்காமல் விடுவதில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அபிமன்யு இறப்பது கண்ணனுக்குத் தெரியாதா என்ன?

எல்லோரையும் காப்பாற்றிய கண்ணன் எனும் தெய்வம், அபிமன்யுவைக் காப்பாற்றவில்லையே… நமக்கு வரும் சிற்சில வேதனைகளைத் தாங்கிக் கொள்வதும், நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த குற்றத்தின் தண்டனையை மனப் பூர்வமாக ஏற்றுக் கொள்வது மட்டுமே முடியும். தெய்வத்திடம் நாம் முறையிடுவது தண்டனையிலிருந்து விலக்கம் பெறுவதற்காக அல்ல; தண்டனையை தாங்கும் பக்குவ நிலையைப் பெற்று, மறுபடியும் எந்தத் தவறும் செய்யாமல் நம்முடைய வாழ்க்கையைத் திருத்தி அமைத்துக் கொள்ள என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

Tags :
× RELATED எதிர்காலத்தை உணர்த்தும் நிரயா தேவி