‘தாயைப் போல பிள்ளை’ என்பதுதான் உலக வழக்கு மொழி. ஆனால், விநாயகப் பெருமானுக்கு இது பொருந்தாது. ஆம்.. அவர் தந்தையைப் போல பிள்ளை என்று வழங்கப்படும் அளவுக்கு, ஈசனுடன் பல ஒற்றுமைகளைக் கொண்டவர். சிவபெருமானைப் போலவே விநாயகப் பெருமான் சிவந்த மேனியை உடையவர். சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பது போல, ஹேரம்ப கணபதிக்கு 5 தலைகள் உண்டு. இருவருக்கும் மூன்று கண்கள் உள்ளன. தலையில் இருவரும் மூன்றாம் பிறையை அணிந்திருப்பார்கள். இருவரும் நாகத்தை ஆபரணமாக கொண்டவர்கள். தந்தையைப் போல விநாயகரும், ஐந்தொழில்களைச் செய்பவர். நடராஜராக நடனக் கோலத்தில் அருளும் ஈசனைப் போலவே, விநாயகரும் ‘நர்த்தன கணபதியாக’ அருள்பவர்.
பார்வதி, சிவனின் இடப்பாகத்தில் இருப்பது போல், ‘வல்லப கணபதி’யாக அம்பாளின் இடப்பாகத்தில் அமர்ந்திருப்பார். பொதுவாக விநாயகருக்கு மலர்களால் அர்ச்சனை செய்வார்கள். மலர் மட்டும் அல்லாமல் சில இலைகளை கொண்டு வழிபடுவர். விநாயகருக்கு உகந்த இலைகளைக் கொண்டு அர்ச்சித்தால், அந்தந்த இலைக்கு உகந்த பலன்களை பெறலாம். மேலும் இந்த இலை வழிபாட்டை, விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தியில்
மேற்கொண்டால், கூடுதல் பலன் கிடைக்கும்.
* முல்லை இலை கொண்டு வழிபட்டால் – அறம் வளர்க்கும்.
* கரிசலாங்கண்ணி இலையால் அர்ச்சித்து வழிபட்டால் – இல்லத்துக்குத் தேவையான பொருட் சேர்க்கை நிகழும்.
* வில்வம் இலையால் அர்ச்சித்து விநாயகரை வழிபட்டால் – விரும்பிய அனைத்தும் கிடைக்கும்.
* அறுகம்புல்லால் அர்ச்சித்து வணங்கினால் – அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம்!
* இலந்தை இலையால் அர்ச்சனை செய்து ஆனைமுகத்தானை வழிபட்டால் – கல்வியில் மேன்மை பெறலாம்.
* ஊமத்தை இலையைக் கொண்டு அர்ச்சித்து வழிபட்டால் – பெருந்தன்மையான மனம் பெறலாம்.
* வன்னி இலை கொண்டு வழிபட்டால் – பூவுலகிலும் சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப் பெறும்.
* நாயுருவி இலையால் வழிபட்டால் – முகப் பொலிவும் அழகும் கூடும். தேஜசுடன் வாழலாம்.
* கண்டங்கத்திரி இலையால் கணபதியை வழிபட்டால் – வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறலாம்.
* அரளி இலையால் ஆனைமுகனை வழிபட்டால் – எல்லா முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.
* எருக்கம் இலை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால் – கருவில் உள்ள சிசுவுக்கு பாதுகாப்பு கிடைக்கும், குழந்தை ஞானத்துடனும் யோகத்துடனும் வளரும்.
* மருதம் இலையால் வழிபட்டால் – மகப்பேறு கிடைக்கும்.
* விஷ்ணுகிராந்தி இலையால் விநாயகப் பெருமானை வழிபட்டால் – தேர்ந்த அறிவுடன் திகழலாம். காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
* மாதுளை இலையால் அர்ச்சனை செய்து வழிபட்டால் – பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும்.
* தேவதாரு இலையால் அர்ச்சனை செய்து வழிபட்டால் – எதையும் தாங்கும் மனோதைரியம் கிடைக்கும்.
குடந்தை நடேசன்
