×

தாமினி யோகப் பலன்கள்

ஜோதிடத்தில் சில யோகங்கள் இருப்பதே தெரியாது. ஆனால், பலர் அதன் பலன்களை அனுபவித்துக் கொண்டிருப்பர். யோகங்கள் இல்லாத உயிர்களே இந்த புவியில் இல்லை எனச் சொல்லலாம். ஒரு உயிர் வாழ்வதற்கும் அந்த உயிர் மற்ற உயிர்களை பிரசவித்து வாழவைப்பதற்கும் ஏதோ ஒரு யோகம் செயல்படுத்திக் கொண்டே இருக்கிறது. நாம் அதை தெரிந்து கொள்வதே இல்லை. காரணம், நடந்து செல்பவன் மிதி வண்டியில் செல்பவனை பார்த்து ஆச்சர்யப்படுவான். மிதி வண்டியில் செல்பவன் இரு சக்கர வாகனத்தில் செல்பவனை பார்த்து ஆச்சர்யப்படுவான். இரு சக்கர வாகனத்தில் செல்பவன் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவனை பார்த்து ஆச்சர்யப்படுவான். நான்கு சக்கர வாகனத்தில் செல்பவன் விமானத்தில் செல்பவனை பார்த்து ஆச்சர்யப்படுவான். இதுவே மனித மனம். தன்னிடம் உள்ள நிறைகளை காணாது மற்றவர்களிடம் உள்ளதை கண்டு தன்னை எப்பொழுதும் தாழ்த்திக் கொள்கிறது. இப்படி யோகம் இருந்தும் தெரியாமலே செயல்படும் யோகம்தான் தாம (டாம) என்கின்ற தாமினி யோகமாகும்.

தாமினி யோகம் என்றால் என்ன?

தமா (டமா) என்பது மாலை என்ற பொருளுண்டு. மாலை போன்ற அமைப்பில் கிரகங்கள் இருந்தால் ஏற்படுகின்ற பல யோகங்களுள் இதுவும் ஒன்று. இது கிரகமாலிகா யோகம் போல அன்று இதில் ஒரு கிரகங்களுக்கும் மற்றொரு கிரகங்களுக்கும் இடைவெளிஇருக்கலாம். ராகு – கேது என்ற சாயா கிரகங்களை தவிர, மற்ற ஏழு கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி ஆகியவை ராசி மண்டல பாவகங்களில் ஆறு (6) முதல் ஏழு (7) பாவகங்களுக்குள் நின்று பலன்களை பிரசவிப்பது தாம என்ற தாமினி யோகம் எனச் சொல்லப்படுகிறது. இதில், வக்ர கிரகங்கள் பலன்களுக்கு உட்பட்டு வராது. எனவே, சாயா கிரகங்களை தவிர்த்து மற்ற கிரகங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

தாமினி யோகத் தன்மைகள்…

இவ்வாறு கிரகங்கள் ஆறு (6) முதல் (7) ராசி பாவகங்களுக்குள் இருக்கும் போது ஐந்து கிரகங்கள் ஆட்சி உச்சம் பெறுவது முழுமையான தாமினி யோகம் நூறு (100%) சதவீதம் பலன்களைத் தரும்.அதே போன்று இரண்டு (2) முதல் நான்கு (4) கிரகங்கள் ஆட்சிப் பெற்றோ அல்லது உச்சம் பெறும் அமைப்பானது அறுபது (60%) சதவீதம் பலன்களைத் தரும்.ஒன்று அல்லது இரண்டு கிரகங்கள் மட்டும் ஆட்சிப் பெற்றிருப்பின் தாமினி யோகமானது ஐம்பது (50%) சதவீதம் பலன்களைத் தரும்.அதுபோலவே, பரிவர்த்தனையிலும் ஆறு (6) முதல் (7) கிரகங்களுக்கு மேல் பரிவர்த்தனை பெற்றிருப்பின் தாமினி யோகமானது எண்பது (80%) சதவீதம் பலன் தரும். இரண்டு (2) முதல் நான்கு (4) கிரகங்களுக்கு மேல் பரிவர்த்தனை பெற்றிருப்பின் கண்டிப்பாக ஐம்பது (50%) சதவீதம் பலன்களைத் தரும்.

தாமினி யோகப் பலன்கள்

* சமூக அந்தஸ்து கிடைக்கப் பெற்றவராக இருப்பர்.
* பொருளாதார நிலையில் அனைத்து நிலையிலுள்ள நபர்களிடம் நன்றாக பழகும் குணம் உண்டாகும்.
* உதவும் மனப்பான்மை இவர்களுக்கு அதிகம் உண்டு.
* சொந்தம் மற்றும் நட்பு உறவுகளுடன் பழகும் குணத்துடன் இருப்பர்.
* அனேக வீடு, நிலபுலன்கள் உடையவர்களாக இருக்கக்கூடிய அமைப்பை உண்டாக்கும்.
* எதிரிகளை எதிர்ப்பதைவிட ஒருபடி மேல் சென்று எதிரிகளை தன்பால் ஈர்க்கும் அமைப்பு உடையவராக இருப்பார்.
* மிருகங்கள், கால்நடைகள், பறவைகள் போன்றவைகளிடம் அன்புள்ளத்தோடு உதவுபவராக இருப்பார். தயாள குணம் இவர்களிடம் அதிகம்.

தாமினி பலன்கள் எப்படி வரும்…

கிரகங்கள் தனித்தனியாக இருக்கும் போது சுயமாக இயங்கும் தன்மையில் இருக்கும். சில கிரகங்களுடன் இணையும் போதும் பார்வை பெறும் போதும் மாற்றுப் பலன்களை அது அமர்ந்துள்ள பாவகத்திற்கு தகுந்தாற் போல தரும் என்பதில் ஐயம் வேண்டாம். பகை கிரகங்களுடன் இயங்கும் பொழுது பலன்கள் குறைவாகவும் சுப கிரகங்கள் பார்வையில் இருக்கும் பொழுது எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட பலன்களாக இருக்கும். அவ்வாறு தனியாக இயங்கும் போது அதனதன் திசா புத்திகள் கிரகங்கள் நகர்வுகளைத் தொடர்ந்து பலன்களைத் தரும். நீண்ட திசாவாக இருந்தால் பலன்கள் நீண்ட காலமாகவும் குறைவான திசாவாக இருந்தால் பலன்கள் குறைந்த காலம் தரும் தன்மையுடன் இருக்கும். ஆட்சிப் பெற்றோ உச்சம் பெற்றோ இருக்கும் போது பலன்கள் அதனதன் திசா காலங்களில் பெரிய அளவில் பலன்களாகத் தரும்.

தாமினி யோகம் வலிமை பெற என்ன செய்யலாம்…

* அந்தந்த கிரகங்களின் திசா – புத்தி கிரகங்களுக்குரிய கிழமைகளில் அந்த கிரகங்களின் அதி தேவதைகளின் ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வதுடன் அங்குள்ள ஏழைகளுக்கு அன்னதானம் உங்களால் முடிந்தளவு செய்து அந்த தேவதை களின் சக்தியை நிரம்ப பெற்று அந்த யோகத்தின் வலிமையை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
* அந்தந்த கிரகங்களுக்குரிய நிறங்களை அடிக்கடி பயன்படுத்துவதன் விளைவாக அந்த கிரகத்தின் ஆற்றலைப் பெறலாம்.
* மேலும், கிரகங்களுக்குரிய தானியங்களை பயன்படுத்தவும் சில கிரகங்களுக்கு அந்தந்த தானியங்களை தானம் வழங்கியும் கிரகங்களின் வலிமையை அதிகப்படுத்துவதன் மூலம் அதற்கான யோகமும் வலிமை பெறும்.

Tags : Damini ,earth ,
× RELATED எதிர்காலத்தை உணர்த்தும் நிரயா தேவி