×

கோபம் எப்போது வேண்டும்? வேண்டாம்?

என்றென்றும் அன்புடன் 11

எதைப் பார்த்தாலும் கோபம் வருகிறது. யாரிடம் பேசினாலும் ஏதோ ஒரு சொல் கோபத்தை தூண்டுகிறது. சிலரின் செயல் கோபத்தை அதிகப்படுத்துகிறது. எனக்கு யார் மேலேயும் இல்லை என் மேலேயே கோவமா வருது. கோபத்திற்கு காமனுஜன் என்று இன்னொரு பெயர் உண்டு. கோபம் ஆசையின் இளைய சகோதரன். தேவைகள் நிறைவேறாமல் போகும்போது கோபம் வரும்.நிறைவேறாத ஆசைகள், இயலாமை இவையே கோபமாக மாறும். நாம் விரும்புவது நம்முடைய ஆசையை நிறைவேற்றுவதற்கா அல்லது தேவையை பூர்த்தி செய்வதற்கா என்பதில் தெளிவு வேண்டும்.

எல்லா நேரங்களிலும் நாம் நினைப்பது நடக்காது. அப்படியே நடந்தாலும் நாம் குறிப்பிடும் நேரத்தில், விரும்பும் விதத்தில் நடக்காது. தேவையற்ற கோபம் வரும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.கோபம் நம் புத்தியை ஆக்கிரமிக்க விடாமல் காத்துக் கொள்ள வேண்டும்.இராமாயணத்தில் , இராவணனின் செய்கையை பார்த்து விபீஷணனுக்கு கவலை வந்தது. அரசவையில் இராவணனிடம் எடுத்துச் சொல்ல முற்பட்ட பொழுது, தம்பி என்றுகூட பாராமல் விபீஷணனை எல்லோர் முன்னிலையிலும் எட்டி உதைத்தான்.

அதுவே இலங்கைக்கும் இராவணனுக்கும் பேரழிவை தேடித் தந்தது.ஆத்திரம் புத்தியை மழுங்கச் செய்யும். பொதுவாக நாம் நம் சோம்பேறித்தனத்தினால் செய்ய வேண்டிய வேலைகளை தள்ளிப் போடுவோம். அதே சோம்பேறித்தனத்தை கோபம் வரும்போது கைபற்றினால், நாம் கோபத்தை தள்ளிப் போடலாம். கோபத்தில் சொல்லலும் வார்த்தைகளை, செயல்களை தள்ளிப் போடலாம். ஆத்திரம் வரும்போது சோம்பேறித்தனம் உதவும்.

ஆத்திரத்தில் நாம் குருடாகவும், செவிடாகவும் மாறுவோம். கோபத்திற்கு பெரும் பலம் உண்டு. நாம் செய்ய முடியாத விஷயங்களை சுலபமாகச் செய்ய வைக்கும்.கோபம் வரும் பொழுது நாம் சிரமம் என்று நினைக்கும் ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டால், உதாரணமாக, வீட்டைச் சுத்தம் செய்தால் கோபத்தில் வேகமாக வேலை நடக்கும்.மஹாபாரத போர் முடிந்தது. பேரழிவு முடிந்தும் குலதெய்வ வழிபாட்டுக்கு அனைவரும் கூடி இருந்தனர். பஞ்ச பாண்டவர்கள் திருதராஷ்டிரனையும், காந்தாரியையும் சந்தித்தனர். ஆத்திரம் திருதராஷ்ட்ரானின் உடம்பு முழுவதும் பரவி இருந்தது. உடம்பு நடுங்கியது. கிருஷ்ணர் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

‘‘என் மகன்களை இழந்தேன். இப்பொழுது எனக்கு இருப்பது நீங்கள் மட்டும்தான். ‘‘திருதராஷ்டிரனுக்கு வஞ்சகமாக பேசத் தெரிந்து இருந்தது.பாண்டவர்களும் உணர்ச்சி பிரவாகத்தில் இருந்தனர். வார்த்தைகள் எழவில்லை. பெரிய தந்தையை இந்த நிலையில் பார்க்க சங்கடபட்டனர். கண்ணீர் வடித்தனர்.‘‘இந்த குருடன், உங்களை எல்லாம் தொட்டுப் பார்த்து ஆறத் தழுவ நினைக்கிறேன்” என்று கூறவும், பாண்டவர்கள் உருகி விட்டனர்.

‘‘என் பீமன் எங்கே ? அவனைத் தான் முதலில் தழுவ வேண்டும். பீமனைத் தொடும் போதெல்லாம் எனக்கு துரியோதனனின் நினைவு வரும். பீமா … எங்கே இருக்கிறாய். அருகில் வா.. பீமா” திருதராஷ்டிரன் கை நீட்டிய படி கூப்பிட்டார்.பீமன் அழுது கொண்டு அவரை நோக்கிப் போனான்.கிருஷ்ணர் சட்டென்று பீமனை தடுத்து செய்கை காட்டினார்.பீமனைப் போலவே ஒரு பெரிய சிலையை கிருஷ்ணர் கொண்டு வரச் செய்தார். அதை திருதராஷ்டிரன் முன் நிறுத்தவும், தன் பலம் கொண்டு பெரும் ஆத்திரத்துடன் அந்தச் சிலையை தழுவினார். சிலை சுக்கு நூறானது.

கோபம் தணித்த பின், ‘‘ஐய்யோ… நான் என்ன செய்வேன். பீமனை கொன்று விட்டேனா. என் ஆத்திரத்தை அடக்க முடியவில்லையே’’ என்று கலங்கினார்.ஆத்திரம் அடங்கிய பின் புத்தி வேலை செய்தது. வருத்தம் வந்தது.கிருஷ்ணர் நிலைமையை விளக்கினார். சமாதானப்படுத்தினார். காந்தாரிக்கோ கிருஷ்ணனின் குரலைக் கேட்டவுடன் அடிவயிற்றில் இருந்து அசூயை கிளம்பிற்று.‘‘ஏ பாதகா, எல்லா அழிவுக்கும் நீதான் காரணம். நாங்கள் என் குழந்தைகளை , வம்சத்தை இழந்ததுபோல், நீயும் உன் யாதவ குலமும் அழியும்.”
கோபம் சாபமாக வந்தது.

கோபம் நம் நிம்மதியை கொன்று போடும் விஷம்போல் உள்ளுக்குள் பரவும். கோபத்தின் முதல் பலி அதைச் சுமப்பவர்தான்.மகாபாரதத்தில் கௌசிகன் என்கிற பிராம்மணன் தன் தவ வலிமையின் மேல் பெரும் கர்வத்துடன் இருந்தான். ஒருநாள் அவன் ஒரு மரத்தின் அடியில் தவத்தில் இருக்கும் பொழுது ஒரு பறவையின் எச்சம் அவன் மீது விழுந்து அவன் தவத்தைக் கலைத்தது.

.ஆத்திரத்துடன் அந்தப் பறவையை பார்த்தான். அது பஸ்பமாயிற்று.அன்று அவன் அருகில் இருக்கும் கிராமத்திற்கு பிட்சைக்கு போகும் பொழுது, ஒரு வீட்டின் வாசலில் நின்று கொண்டு பிட்சை கேட்டான்.அந்த வீட்டில் இருந்த பெண் அவளுடைய கணவருக்கு உணவு பரிமாறி கொண்டிருந்தாள். சிறிது நேரம் காத்துக் கொண்டிருந்த கௌசிகனுக்கு ஆத்திரம் வந்தது. கோபத்துடன் பேச ஆரம்பிக்கும் பொழுது . அந்த வீட்டின் உள்ளேயிருந்து அந்தப் பெண்மணியின் குரல் வந்தது.‘‘என்னை என்ன அந்த பறவை என்று நினைத்தாயோ, உன் கோவத்தினால் எரிந்து போவதற்கு” என்றாள்.

அந்தப் பெண்ணின் வார்த்தை, கௌசிகனின் அகங்காரத்தை நொறுக்கியது. அவளை வணங்கிய கௌசிகன், ‘‘அம்மா தங்களுக்கு இந்த விஷயம் எப்படித் தெரிந்தது.”‘‘எவர் ஒருவர் அவர்கள் கடமையை, முழு மனதுடன் எந்த பலனும் எதிர்ப்பார்க்காமல் தெய்வ சிந்தனையுடன் செய்கிறார் களோ அதுவே தவமாகும்” என்று கூறினாள்.

கௌசிகனுக்கு புரிந்தது.கோபம் மிகவும் முக்கியமான ஒன்று. கோபத்தை ஆத்திரமாகக் கொள்ளாமல் செயல்திறனாக மாற்றிக் கொள்ள வேண்டும். கோபம் என்பது பெரும் நெருப்பு. அதைக் கொண்டு அழிக்கலாம் அல்லது ஹோம குண்டத்தில் வைத்து யாகமாக வளர்க்கலாம்.கோபத்தை சீராக கையாண்டால் பெரும் செயல் ஆற்ற முடியும்.

ரம்யா வாசுதேவன்

 

Tags :
× RELATED திருப்புகழ் பஞ்சபூதத் தலங்கள்