கோவை என்று சொன்னாலே நமக்கு நினைவுக்கு வருவது, தனித்துவமான கோவை மக்கள் பேசும் தமிழ்தான் முதலில் நினைவுக்கு வரும். மேலும், மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டு, நொய்யல் ஆற்றின் கரையில் அழகாக அமைந்துள்ளது, கோவை மாநகரம்! இத்தகைய பெருமைவாய்ந்த கோவை, ஏராளமான பிரசித்தி பெற்ற கோயில்களையும் தாங்கி இருக்கிறது என்பது கோவைக்கு இன்னும் பெருமைகளை சேர்க்கிறது.ஆம்! பேரூர் பட்டீஸ்வரர் கோயில், பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில், அவிநாசி அவிநாசியப்பர் கோயில், மருதமலை தண்டாயுதபாணி கோயில், உக்கடம் கரிவரதராஜப் பெருமாள் கோயில், சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோயில், நவகரை மலையாள தேவி துர்கா பகவதி கோயில், பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் என மிகப் பெரிய பட்டியல் நீள்கிறது. இதனோடு, மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனும் இருப்பது, சிறப்பிலும் சிறப்பு அல்லவா!
கோவையில் சாதுர் மாதம்
கோவை ரங்காய கவுண்டர் தெரு, பரபரப்புக்கு பஞ்சமில்லாத இடம். கூட்ட நெரிசல்கள் மிகுந்த பகுதியாகும். காரணம், காய், பழம், தேங்காய், என அத்தியாவசிய பொருட்கள் விற்பனையாகும் முக்கிய இடம். ஆகையால், எப்போதும் மக்களின் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இத்தகைய பரபரப்பிற்கு மத்தியில், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த “வீர ஆஞ்சநேயர்’’ கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். மிகச் சிறிய அளவிலான கோயிலின் நுழைவாயில் காணப்பட்டாலும், உள்ளே சென்றதும் கோயில், பிரமாண்ட அளவில் இருக்கிறது. மக்களின் கூச்சல் சத்தம், வண்டிகளின் ஹாரன் சத்தம் என வெளியில் ஒரே சத்தமாக இருந்தாலும், கோயிலுக்குள் வந்தவுடன் நிசப்தமாக இருந்தது. மனமானது அமைதிபெற்றது. கோயிலின் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை நிர்வாகியான ஸ்ரீனிவாசன், நம்மிடையே மடமடவென சொல்ல ஆரம்பித்தார்.
“சுமார் 565 வருடங்களுக்கு முன்னர், மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர், தென் தமிழகத்திற்கு தேச சஞ்சாரத்தை மேற்கொள்ளும் சமயத்தில், கோவைக்கு விஜயம் செய்தார். அப்போது, சாதுர் மாதம். சந்நியாசிகளுக்கு சாதுர் மாத விரதம் மிகவும் முக்கியம். சஞ்சாரம் மேற்கொள்ளும் போது, சாதுர் மாதம் வந்தால், சந்நியாசிகள் எந்த ஊர்களில் இருக்கிறார்களோ, அந்த இடத்திலேயே தங்கிருந்து, சாதுர் மாத விரதத்தை கடைபிடிப்பார்கள்.அப்படிதான் வியாசராஜர், கோவைக்கு வரும் சமயத்தில் சாதுர் மாதம் வருகிறது. ஆகையால், கோவையில் தங்கியிருந்து, சாதுர் மாத விரதத்தை கடைபிடிக்கிறார். மத்வ சம்ரதாயத்தில், பகவான் விஷ்ணுவை கடவுளாகவும், ஆஞ்சநேயரை குருவாகவும் எண்ணுகிறார்கள். அதன் பொருட்டு, தான் தங்கியுள்ள இடத்தில், தன் குருவான அனுமனை பிரதிஷ்டை செய்கிறார், வியாசராஜர். (இந்த அனுமன்தான் தற்போது ரங்காய கவுண்டர் தெருவில்இருக்கிறார்)
இரண்டு மிருத்திகா பிருந்தாவனம்
நாளடைவில், “ஸ்ரீ வீர ஆஞ்சநேயர்’’ என்னும் பெயர் கொண்டவராக பிரசித்தி அடைகிறார். நாட்கள் செல்ல… அனுமன் பிரதிஷ்டை ஆகியுள்ள இடத்தின் மேலே, ருக்மிணி – சத்யபாமா சமேத ஸ்ரீ கோபாலகிருஷ்ணரும், அனுமனின் வலது பக்கத்தில் ஸ்ரீ வியாசராஜரின் மிருத்திகா பிருந்தாவனமும், இடது பக்கத்தில் ஸ்ரீ ராகவேந்திரரின் மிருத்திகா பிருந்தாவனமும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு மிருத்திகா பிருந்தாவனமும் கூர்ம பீடத்தில் மிக அழகாக காட்சியளிக்கிறது. தற்போது, அனைத்து மத்வ மடாதிபதிகளும், கோவைக்கு வந்தால், இந்த அனுமனை தரிசிக்காமல் செல்வதில்லை. அனுமன், கிழக்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அனுமன் ஜெயந்தி அன்று “சுமத்வ விஜயம்’’, “ஹரி வாயு ஸ்துதி’’, “விஷ்ணு சகஸ்ரநாமம்’’ ஆகிய ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்படுகிறது. தினமும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. ஆனால், ஏகாதசி ஒரு நாள் மட்டும் நிர்மால்யம் என்று சொல்லக்கூடிய ஜலத்தால் (தண்ணீர்) மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். அன்றைய தினம் நிவேதனம், மாலை அலங்காரங்கள் கிடையாது. மறுநாள் விடியற் காலையிலேயே அபிஷேகம் செய்யப்பட்டு, நிவேதனம், அலங்காரம் செய்து மங்கள ஆரத்தி காட்டப்படும்.
தேன் அபிஷேகம்
அதே போல், ஏகாதசி அன்று பக்தர்கள் யாராவது அனுமனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்று வந்தால், அன்றைய தினம் அர்ச்சனையும் செய்யப்படமாட்டாது. மேலும், இவருக்கு வடை மாலை சாற்றும் முறையும் இல்லை. பக்தர்கள் யாராவது தேன் கொடுத்தல், அதனை அபிஷேகம் செய்து மீண்டும் அவர்களிடத்திலேயே கொடுத்துவிடுகிறார்கள். அனுமனுக்கு தேனாபிஷேகம் மிகவும் விசேஷமானது. நினைத்த காரியத்தை உடனே நிறைவேற்றித்தருவார். இக்கோயிலில், சுமார் 13 நாட்டு பசுமாடுகள் மட்டுமே இருக்கும் கோ சாலை உள்ளது. மேலும், 200 வருடங்கள் பழமைவாந்த அரசமரம் ஒன்றும் உள்ளது.
விழாக்கள்
இங்கு, கோபாலன் இருப்பதால் கிருஷ்ண ஜெயந்தியும், அனுமன் இருப்பதால் அனுமன் ஜெயந்தியும், வியாசராஜரின் மிருத்திகா பிருந்தாவனம் இருப்பதால் அவரின் ஆராதனையும், ராகவேந்திரரின் மிருத்திகா பிருந்தாவனம் இருப்பதால் அவரின் ஆராதனையும், வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
