திருமணங்களில் எத்தனை வகை திருமணங்கள்?
எட்டு வித விவாஹங்கள் பற்றி பழைய நூல்களில் உண்டு. தர்ம சாஸ்திரங்களில் எட்டு விதமான விவாஹங்கள் சொல்லியிருக்கிறது.
“ப்ரஹ்மோ-தைவ-ஸ்ததைவார்ஷ:
ப்ரஜாபத்ய-ஸ்ததாஸுர:
காந்தர்வோ ராக்ஷஸச்சைவ
பைசாசாஷ்டம: ஸ்ம்ருத:’’ (மநுஸ்மிருதி III.21)
அதாவது பிராம்மம், தைவம், ஆர்ஷம், பிரஜாபத்தியம், ஆஸுரம், காந்தர்வம், ராக்ஷஸம், பைசாசம் என்று மணத்தில் மொத்தம் எட்டு தினுசு.
1.‘பிராம்மம்’ – பெண்வீட்டாரிடம் கன்யாதானம் பெற்று மண முடிப்பது. மாதா-பிதாக்கள் ஒரு நல்ல குலத்துப் பெண்ணின் மாதா பிதாக்களிடம் வந்து கன்யாதானம் பண்ணித் தரச்சொல்லிக் கேட்டுக்கொள்வது.
பிள்ளைக்குப் பெண் வீட்டார் வரதட்சணை தருவது, பெண்ணுக்குப் பிள்ளை வீட்டார் பரிசம் தருவது என்று இரண்டும் இதில் இல்லை. இரண்டு குலங்கள் அபிவிருத்தியாக வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் மட்டுமே பிரதானம் எட்டு வித விவாஹங்களில் இதைத்தான் மிகவும் சிரேஷ்டமாகச் சொல்லியிருக்கின்றன.
2. ‘தைவம்’ – பெண் வீட்டார் மாப்பிள்ளை தேடி மணமுடிப்பது.
3. ‘ஆர்ஷம்’ – கல்வியில் மேம்பட்டோருக்கு மணமுடிப்பது.
4. ‘பிரஜாபத்தியம்’ – பெண் ருதுவாகும் முன்பே அவசர அவசரமாக மாப்பிள்ளைதேடி, ருதுவானதும் மணமுடிப்பது.
5. ‘ஆஸுரம்’ – பொண்ணுக்கு பொருத்தமற்றவனை மணமுடிப்பது.
6. ‘காந்தர்வம்’ – காதல் கல்யாணம்.
7. ‘ராக்ஷஸம்’ – போட்டி அல்லது சண்டையில் பெண் அல்லது பெண்ணின் தரப்பினரை வெற்றி கொண்டு மணமுடிப்பது.
8. ‘பைசாசம்’ – வலுக்கட்டாயமாக திருமணம் செய்வது.
1. யஜ்ஞஸ்ய ரித்விஜே தைவ: (யாஜ்ஞவல்கிய ஸ்மிருதி I.59)
2. ஆகாயார்ஷஸ்து கோத்வயம் (யாஜ்ஞவல்கிய ஸ்மிருதி I.59)
3. ஆஸுரோ த்ரவிணாதானாத் (யாஜ்ஞவல்கிய ஸ்மிருதி I.61)
4.உதீர்ஷ்வாத: பதிவதீ ஹ்யேஷா விச்வாவஸூம் நமஸா கீர்பிரீடே
“அந்யாம் இச்ச பித்ருஷதாம் வ்யக்தாம் ஸ தே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி
உதீர்ஷ்வாதோ விச்வாவஸோ நமஸேடாமஹே த்வா
அந்யாம் இச்ச ப்ரபர்வ்யம் ஸம்ஜாயாம் பத்யா ஸ்ருஜ’’ – (ரிக் X.85.21-22) என்றெல்லாம் விளக்கங்கள் உண்டு.
தொல்காப்பியம் காட்டும் எட்டு வகைத் திருமணங்கள்.
திருமணம் எட்டு வகைப்படும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அந்த எட்டு இவை என 7 ஆம் நூற்றாண்டு நூல் இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது. 12 ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இளம்பூரணர் இந்த 7 திருமண முறைகளின் பெயரை வடமொழிப் பெயர்களால் குறிப்பிடுகிறார்.
1. அறநிலை பிரமம்: கன்னியை அணிகலன் அணிந்து பிரம சாரியாய் இருப்பவன் ஒருவனுக்குத் தானமாகக் கொடுப்பது. வேத வித்தக னாகவும், நல்லொழுக்கமுடையவனாகவும் இருக்கும் பிரம்மச்சாரியை வலியச் சென்று அழைத்து அவனைப் புத்தாடை அணிவித்து ஆடை யணிகளால் அழகு செய்த பெண்ணை அவனுக்குத் தானம் செய்வது அறநிலை.ஒப்பாருக் கொப்பா ரொருபூப் பிரிந்தபின் இன்பான் மதிதோன்றா வெல்லைக்கணப்பால் தருமமே போல்கென்று தக்கார்க்குச் சேர்த்தல் பிரமமாம் போலும் பெயர்
2. ஒப்புபிரசாபத்தியம்: ஒப்பு (விதிமணம் அல்லது பிரசாபத்தியம்) ஆவது, மணமகன் கொடுத்த பரிசத்தினை விட மணமகளைப் பெற்றவர்கள் இரு மடங்கு கொடுத்து, மணமகளும், மணமகனும் சேர்ந்து அறவழியில் செல் லட்டும் என்று தீர்மானித்துக் கொண்டு பெண்ணைக் கொடுப்பது ஒப்பு எனப்படும்.
3. பொருள்கோள் ஆரிடம்: பொருள் கோள் எனப்படுவது ‘‘ஏறும் ஆவும் கொணர்ந்து நிறீஇ, அவற்றின் முன்னர் கைக்கு நீர்பெய்து கொடுத்தல்’’ அதாவது மணமகனிடம் இரண்டு பசுக்களை அல்லது காளைகளைப் பெற்றுக் கொண்டு பெண்ணைக் கொடுப்பது ஆரிடம் எனப்படும்.
4. தெய்வம் (தைவம்): வேள்வி செய்து அதன் முடிவில் அதனை நடத்திய ஆசிரியன் ஒருவற்கு மகளை அணிகலனணிந்து அவ்வேள்வித்தீ முன்னர் காணிக்கையாக கொடுப்பது, தெய்வம் எனப்படும்.
5. யாழோர் கூட்டம் (கந்தருவம்): யாழோர் கூட்டம் (கந்தருவம்) எனப்படுவது ஒத்த குலம், குணம், அழகு, அறிவு, பருவம் உடையார், யாரு மில்லாத ஒரு சிறைக்கண் அன்பு மீதூரத் தாமே புணர்ந்து ஒழுகும் ஒழுக்கம். அதாவது பெண்ணும் ஆணும் மனமொத்துத் தாங்களாகவே கலந்து கொள்வது
6. அரும்பொருள் வினை (அசுரம்): அரும் பொருள் வினை (அசுரம்) எனப்படுவது அரிய சாதனைகளைச் செய்து மணமகன் மணப்பெண்ணைப் பெறுதலாகும். இவையன்றி பெற்றவன் குறிக்கும் பெரும் பொருளைக் கொடுத்துப் பெண்ணை வாங்கி அணிகள் பூட்டி இம்மணம் நிகழ்தலும் உண்டு.
7. இராக்கதம்: அவளது உறவினர்களை அடித்துக் கொன் றும் பிளந்தும், ஒரு பெண்ணை அவளது வீட்டிலிருந்து தன் வலிமையால் கவர்ந்து சென்று மணப்பது இராக்கதம் எனப்படும்.
8. பேய்நிலை (பைசாசம்): பேய்நிலை எனப்படுவது தூக்கத்திலோ குடி மயக்கத்திலோ, இறந்தோ உள்ள ஒருபெண்ணைத் தூக்கிக் கொண்டு போய் ஒருவன் புணர்வது பேய்நிலை எனப்படும்.
தச விதப் பொருத்தம் பார்ப்பது ஏன்?
நாம் ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிடரிடத்தில் போனால், அவர் ஆண், பெண் இரண்டு ஜாதகங்களையும் வைத்துக்கொண்டு, முதலில் நட்சத்திரப் பொருத்தத்தைப் பார்ப்பார். நட்சத்திரப் பொருத்தத்தை பத்து விதமாகப் பார்ப்பார்கள். இதற்கு தசவித பொருத்தம் என்று பெயர். இது பஞ்சாங்கங்களிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் பார்த்தால் போதுமா? அதை மட்டும் வைத்துக்கொண்டு திருமணம் செய்து விட முடியுமா? என்றும் விவாதம் நடந்து வருகின்றது.இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நட்சத்திரப் பொருத்தத்தில் இருந்துதான் மற்ற எல்லாப் பொருத்தங்களும் பார்க்கப்படுகின்றன.
எனவே அடிப்படையானது நட்சத்திர பொருத்தம்தான். அது மட்டும் இல்லை. நட்சத்திரம்தான் நம்முடைய எல்லா நடைமுறைச் செயல்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது. உதாரணமாக நீங்கள் கோயிலுக்குப் போய் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று சொன்னால், அங்கே உங்கள் நட்சத்திரத்தை மட்டும்தான் நீங்கள் பெயரோடு சேர்த்துச் சொல்ல வேண்டும். நம்முடைய ஜாதகம் முழுமையும் சொல்லவேண்டிய அவசியம் அங்கே இல்லை.
நீங்கள் ஒரு பலனைப் பெறவேண்டி ஒரு ஹோமமோ, இல்லை, வழிபாடோ செய்யும் பொழுது, சங்கல்பத்தில் எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த நிலையில் இருக்கின்றன என்பதையெல்லாம் சொல்வது இல்லை. நம்முடைய நட்சத்திரத்தையும், முடிந்தால் ராசியையும் சொல்கிறோம். அதிலேயே எல்லாம் அடங்கி விடுகிறது. நமக்கு தேவையான பலன்கள் கிடைத்து விடுகின்றன. நம்முடைய தெய்வீக வைதீக ஜோதிட மரபிலே நட்சத்திரத்திற்கு பெரிய மதிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒருவனுடைய ஜென்ம நட்சத்திரம் அவன் பிறந்ததிலிருந்து ஒவ்வொரு செயலிலும் பயன்படுகிறது.
அவர் செய்கின்ற வைதிகக் காரியங்களாக இருக்கட்டும்; ஹோமங்கள் செய்வதாக இருக்கட்டும்; கோயில்களில் அர்ச்சனை செய்ததாக இருக்கட்டும்; நட்சத்திரம் தான்.எனவே, திருமணப் பொருத்தத்திலும் நட்சத்திரப் பொருத்தத்தை நாம் விளையாட்டாகக் கருதிக் கொள்ளக்கூடாது. திருமணத்தில் கன்னியாதானம் செய்கின்ற பொழுது கோத்திர பிரவரம் சொல்லுவார்கள். அதாவது இந்த நட்சத்திரம் உடைய பையனுக்கு இந்த நட்சத்திரம் உடைய பெண்ணை, (அவரவர்கள் வழித்தோன்றல் முறையைச் சொல்லி) கன்னிகாதானம் செய்து கொடுக்கிறேன் என்பார்கள்.
அங்கேயும் நட்சத்திரம்தான்
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பையனுக்கு (வரன்) இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை (வது)கன்னிகாதானம் கொடுக்கிறேன் என்று வருவதால் நட்சத்திரத்திற்கு அவ்வளவு பிரதானம். கோயிலிலே சுவாமிக்குத் திருக்கல்யாணம் நடக்கும் பொழுதும் இதே அமைப்பில் தான் நடத்துவார்கள். சுவாமி நட்சத்திரத்தையும், அம்பாளுடைய நட்சத்திரத்தையும், பெருமாள் கோயிலாக இருந்தால் பெருமாள் நட்சத்திரத்தையும், தாயார் நட்சத்திரத்தையும் சொல்லி, கன்னிகாதானம் செய்வார்கள். இங்கேயும் ஒரு
நுட்பமான குறிப்பு இருக்கிறது
ஏன், இரண்டு திருமணங்களும் ஒரே விதத்தில் நடத்தப்படுகிறது என்றால், மணவறையில் அமர்ந்திருக்கும் மணமகனும் மணப்பெண்ணும் சாட்சாத் மகாவிஷ்ணு, மகாலட்சுமித் தாயாராக கருதப்படுகிறார்கள்.திருமணம் புனிதமானது. தெவீகமானது என்பதன் அடையாளம் இது. மந்திரத்திலேயே அப்படித்தான் வருகிறது. எனவே நட்சத்திரம் என்பது மிக முக்கியமானது.இருவர் நட்சத்திரத்தையும் சொல்லி இணைக்கும் போது நட்சத்திர தோஷங்கள் நம்மை மீறி ஏற்பட்டிருந்தாலும் கழிந்து விடும். ஆனால், வெறும் நட்சத்திரப் பொருத்தங்களை மட்டு மே வைத்து முடிவெடுத்து விடக்கூடாது. ஜாதகப் பொருத்தங்கள் முழுமையாகப் பார்க்க வேண்டும் என்று சொல்கின்றார்கள். இதில் தவறு இல்லை. நிச்சயமாக ஜாதகப் பொருத்தத்தைக் கட்டாயமாகப் பார்க்க வேண்டும். ஆனால், ஜாதகப்பொருத்தம் கூட, இந்த நட்சத்திரப் பொருத்தங்களில் அடங்கி இருக்கிறது என்பதால், முதல் நிலையாக, நட்சத்திரப் பொருத்தத்தை எடுத்துக்கொண்டு, பிறகு ஜாதகத்தின் உயிர் பொருத்தமாக இலக்கினப் பொருத்தத்தையும், உடல் பொருத்தமாகிய ராசிப் பொருத்தத்தையும் பார்த்து முடிவெடுக்கலாம்.
அதைவிட முக்கியமானது. அவர்களுக்கு நடக்கக்கூடிய திசா புத்தி அந்தரங்கள். எத்தனை யோக ஜாதகமாக இருந்தாலும், அவயோக ஜாதகமாக இருந்தாலும், அந்தப் பலனை அந்தந்த காலத்தில் தான் அனுபவிக்க முடியும். அது எந்தக் காலம் என்பதை தீர்மானம் செய்வது தசாபுத்திகளும் கோள் சார நிலைகளும்தான். இந்த கோள் சார நிலைகளில் மிக முக்கியமானது தாரா பலன். இந்த தாரா பலம் நட்சத்திரப் பொருத்தத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால் அங்கேயும் நட்சத்திர பொருத்தம் வந்துவிடும். அடுத்து மிக முக்கியமானது தசாபுத்தி. இந்த தசா புத்தி காலங்களே சம்பவத்தைத் தீர்மானிக்கின்றன. இதுவும் நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் இருக்கின்றது. ஒருவர் அசுவனி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவருக்கு கேது தசை ஆரம்பமாகி இருக்கும். அதற்குப் பிறகு வரிசையாக சுக்கிர தசை, சூரிய தசை என்று தொடரும். எனவே, திருமணத்திற்கு ஜாதகம் பார்க்கின்ற பொழுது, அவருடைய தசா புத்தி நேரத்தை, அவர் பிறந்த நட்சத்திரம்தான் தீர்மானிக்கிறது என்பதால், நட்சத்திரம் உயிரானது. குறைந்தபட்சம், முப்பது வருடங்கள், எந்தப் பிரிவும் இன்றி, வாழ்கின்ற தம்பதிகளின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தால், பெரும்பாலான ஜாதகங்களில் மிக முக்கியமான நட்சத்திரப் பொருத்தங்கள் இருக்கும்.
ஒரு சிலவற்றில் இல்லாமல் இருந்தாலும்கூட, வேறு சில பொருத்தங்களால், நட்சத்திரப் பொருத்தங்களின் தோஷம் சரி செய்யப்பட்டு இருக்கும்.இன்று சார ஜோதிட விஞ்ஞானம் (நட்சத்திர ஜோதிடம்) ஆழமாகப் பரவி வருகிறது. ஒரு கிரகமானது, தான் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் அடிப்படையில் தான் பலனைச் செய்கிறது.குறைந்தபட்சம் ஜாதகத்தின் அம்சக் கட்டங்களைத் தீர்மானம் செய்வது கிரகங்களின் நட்சத்திரப் பாதங்கள் தான். ஒரு கிரகம் எந்த நட்சத்திரக் காலில் இருக்கிறது என்கின்ற சாரத்தை வைத்துக்கொண்டுதான் கிரகத்தினுடைய பலனை நாம் தீர்மானம் செய்ய முடியும்.திருமணப் பொருத்தமாக இருந்தாலும், வேறு பலன்களைப் பார்ப்பதாக இருந்தாலும் சரி, நட்சத்திரங்கள் அமைப்பைக் கொண்டு தான் பெரும்பாலான விஷயங்கள் முடிகின்றன. எனவே, திருமணப் பொருத்தத்திற்கு நட்சத்திர பொருத்தம் மிக முக்கியம் என்பதை மறந்து விடக்கூடாது ஆனால் அதோடு நிறுத்தி விடாமல் ஜாதகப் பொருத்தம், தசாபுத்திகள், கோள் சாரம் பார்த்துதான் முடிவெடுக்க வேண்டும்.
பந்தற்கால் ஏன்?
முதலில் பந்தக்கால் நடுவதைப் பார்ப்போம். அழகுக்காகவும் திருமணச் சடங்குகள் நடக்கும் பொழுது பந்தலின் மேலிருந்து தூசி அழுக்குப் பொருட்கள், பல்லி போன்றன விழுந்துவிடாமல் இருப்பதற்காகவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பந்தலை கமுகு, வாழை, தென்னை ஓலை களால் அலங்கரிப்பர். ஆண்டாள் பூரண பொற்கும்பம் வைத்துப் புரமெங்கும் தோரணம் நாட்டக் கணாக்கண்டேன் என்ற வாசகத்தை அனுசரித்து அழகு பந்தல் அமைக்க வேண்டும். திருமணம் மூன்று நாள் இருக்கும்போது, திருமண நிகழ்ச்சி நடைபெறும் வீடு அல்லது சத்திரத்தின் முற்றத்தில் மணப்பந்தல் அமைப்பதற்கான பந்தற்கால் நடுதல் வேண்டும். மங்கல மங்கையர் அப்பந்தற்காலைக் கழுவி மஞ்சள், குங்குமம் இட்டு மாவிலை கட்டிப் பந்தலின் வடகிழக்கு மூலையில் நடவும். பந்தற்காலின் கீழ் நவதானியம் அல்லது நவமணிகளை வசதிக்கேற்ப இடலாம். விளக்கேற்றி விக்வச்சேனர் வைத்து வழிபட்ட பின்பு பந்தற்காலை நட்டு தீபாராதனை முடிந்து வந்தவர்கட்கு தாம்பூலம் தர வேண்டும்.
(தொடரும்)
